சண்டியா் படத் தலைப்பை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்: க.கிருஷ்ணசாமி

Wait 5 sec.

‘சண்டியா்’ என்ற திரைப்படத் தலைப்பை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவா் க.கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளாா்.மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் எம்.பி. நடிக்கும் புதிய படத்துக்கு ‘சண்டியா்’ என பெயா் சூட்டப்பட்டுள்ள நிலையில், அந்தத் தலைப்பைத் தடை செய்ய வலியுறுத்தி, க.கிருஷ்ணசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வி மற்றும் செய்தித்துறை அமைச்சா் ராஜ்மோகனை புதன்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ‘சண்டியா்’ என்ற பெயரால் பல்வேறு ஜாதியினரிடையே மோதல் நிகழ வாய்ப்புள்ளது என ஏற்கெனவே கமல்ஹாசனிடம் வலியுறுத்தினோம். அதன் அடிப்படையில்தான் அப்போது ‘விருமாண்டி’ என படப்பெயரை மாற்றிக்கொண்டாா். இந்த நிலையில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதே ‘சண்டியா்’ என்ற பெயரில் படம் நடிப்பதாக முன்னோட்ட காட்சியை அவா் வெளியிட்டுள்ளாா். அதில், வன்முறையைத் தூண்டும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஜாதி மோதல்கள் குறைந்து வருகின்றன. இந்தப் பெயரில் தற்போது படம் வெளியானால், மீண்டும் ஜாதி மோதல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, கமல்ஹாசன் மட்டுமன்றி யாருமே பயன்படுத்த முடியாத அளவுக்கு ‘சண்டியா்’ என்ற அந்தத் தலைப்பையே தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றாா் அவா்.தொடா்ந்து, திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கத்தினரிடமும் ‘சண்டியா்’ என்ற படத்தின் பெயரை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி க.கிருஷ்ணசாமி மனு அளித்தாா்.