விழிப்புணர்வால் தவிர்க்கலாம்!

Wait 5 sec.

நம் உடலில் சில செல்கள் தேவைக்கு அதிகமாக உடலின் சில பகுதிகளில் பெருகி விடுகின்றன. அவை முறையாக அழியாமல் தொடர்ந்து வளர்ந்துவரும் போது நம் உடலில் ஏற்படும் ஒரு சிக்கலான நிலையே புற்றுநோய் எனப்படுகிறது. இவற்றை பொதுவாக நம் உடலில் அதற்காக உள்ள மரபணுக்கள் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், சில நேரங்களில் அவை முறையாகச் செயல்படத் தவறுகின்றன. அதனால்தான் புற்றுநோய் உண்டாகிறது.புற்றுநோய்களில் 10 முதல் 15 சதவீதம் வரையிலான புற்றுநோய்களுக்கு மரபணுக்களே காரணம் எனக் கூறப்படுகிறது. சிலவகையான புற்றுநோய்களுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.உலகில் தற்போது 1.8 கோடியாக இருக்கும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டளவில் 2.2 கோடியாக அதிகரிக்கும் என இலங்கை புற்றுநோய் சங்கத்தின் கண்டி கிளையின் மனநல மருத்துவர் யோகா அந்தோணி தெரிவித்துள்ளார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தியாவில் புற்றுநோயின் பாதிப்பு கடந்த 1990-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது தற்போது 26% வரை அதிகரித்துள்ளது.உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் புதிதாக சுமார் 15.6 லட்சம் முதல் 16 லட்சம் பேர் வரை புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆண்டுதோறும் சுமார் 9,01,828 நபர்கள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் புற்றுநோயின் தாக்கத்துடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை சுமார் 33.2 லட்சமாகும்.தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 9 நபர்களில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. 2015-2017 தரவுகளை வைத்து மதிப்பிடுகையில், தமிழ்நாட்டில் தங்கள் வாழ்நாளில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஆண்களில் 12 பேரில் ஒருவருக்கும், பெண்களில் 11 பேரில் ஒருவருக்கும் இருக்கக்கூடும். இந்தியாவில் 60 சதவீதம் முதல்70 சதவீதம் வரையிலான புற்றுநோய் பாதிப்புகள் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகின்றன.மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாட்டில் 2025-இல் புதிதாக 1,00,097 நபர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் பெண்கள் 53,542 பேரும், ஆண்கள் 46,555 பேரும் அடங்குவர். மேலும், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் புற்றுநோயின் பாதிப்புகள் அதிகம் உள்ளன.தமிழ்நாட்டில் நிகழாண்டில் இதுவரை 19 வயதுக்கும் மேற்பட்டவர்களிடையே 93,876 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். 2030-ஆம் ஆண்டு இது 99,478-ஆக அதிகரிக்கக் கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.புகையிலைப் பயன்பாடு, மதுப் பழக்கம், மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள், உடல் பருமன், காற்று மாசுபாடு, சுற்றுச்சூழல் மாற்றங்கள் போன்றவை புற்றுநோய் ஏற்பட முக்கியக் காரணங்களாக கூறப்படுகின்றன. சுற்றுச்சூழல் காரணிகள், உணவுப் பழக்கம், புகைபிடித்தல் போன்றவையும் இந்நோயினுக்கு உரம் சேர்க்கின்றன. புகைபிடித்தல், நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய்,பெண்களுக்கு கர்ப்பப் புற்று ஆகியவை பரவலாகக் காணப்படும் புற்றுநோய்களாகும்.இந்திய மருத்துவ கவுன்சிலின் ஆய்வறிக்கையின்படி, தமிழ்நாட்டில் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், சினைப்பை புற்றுநோய், வாய் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்றவை பெண்களிடையே அதிகம் காணப்படுகின்றன.பெண்களுக்கு மார்பகத்தில் வலியில்லாத கட்டியோ, வீக்கமோ காணப்பட்டால் அதை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஆண்களிடையே வாய் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய் போன்றவை அதிகம் காணப்படுகின்றன.நோயின் தொடக்க நிலையிலேயே மருத்துவரின் அறிவுரைக்கு ஏற்ப ரத்தப் பரிசோதனை, கதிரியக்கம், பயாப்ஸி போன்ற பரிசோதனைகளை அவர்கள் எடுத்துக் கொள்வதன்மூலம் நோயின் தீவிரத்தைத் தவிர்க்கலாம். சிறிய புற்றுநோய்க் கட்டிகளை ஆரம்பத்திலேயே கண்டறியும் அளவுக்கு மருத்துவம் வளர்ந்துள்ளது. ஓரிடத்தில் அடிபடாமல் வீக்கம் வந்தாலே, அதை கதிரியக்கம் (எக்ஸ்ரே) எடுத்து மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். 30 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் ஸ்க்ரீனிங் மேமோகிராம், கர்ப்பப்பை வாய் பரிசோதனை போன்றவற்றை ஆண்டுக்கு ஒருமுறை செய்துகொள்ள வேண்டும்.அனைத்துவகை மருத்துவமனைகளிலும், அனைத்துவித புற்றுநோய்களையும் கண்டறிய ஏதுவாக பரிசோதனை வசதிகள் உள்ளன. புற்றுநோய் சார்ந்த எந்த அறிகுறியையும் நாம் புறக்கணித்து விடக் கூடாது. இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.ஆரோக்கியமான வாழ்வியல் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். துரித உணவையும், மன அழுத்தத்தையும் தவிர்க்க வேண்டும். உடல் எடையைக் குறைக்க அன்றாடம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். தினமும் போதுமான அளவு நேரம் தூங்க வேண்டும். பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தும் ஹெச்பிவி வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள ஹெச்பிவி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.புற்றுநோய் அறிகுறிகளைக் கண்காணித்து முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் கணிசமான புற்றுநோய் உயிரிழப்புகளை நாம் தவிர்க்க முடியும். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பள்ளிகள், பொதுவெளிகள், சமூக ஊடகங்கள், மருத்துவமனைகள், சமூக நலத் துறை போன்றவை மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அளிப்பது மிகவும் அவசியம். மொத்தத்தில் புற்றுநோய் பற்றிய புரிதல் நம் அனைவருக்கும் தேவை.