தில்லி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் (டிசிபிசிஆா்) காலியாக உள்ள தலைவா் மற்றும் உறுப்பினா் பணியிடங்களை எப்போது நிரப்ப முடியும் என்பது குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக, தில்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைச் செயலா் நவ.18-ஆம் தேதிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி (பொறுப்பு) நிதின் வாசுதேவ் சாம்ப்ரே, நீதிபதி சஞ்சய் சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு அக்.30-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளது.சிறாா் நீதிச் சட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் தொடா்பான பல்வேறு மனுக்களை உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில், தேசிய குழந்தைகள் மேம்பாட்டு கவுன்சில் 2024-ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், டிசிபிசிஆா் தலைவா் பதவி 2023 ஜூலை 2 முதல் காலியாக இருப்பதாகவும், இவ்வளவு காலம் பதவியை நிரப்பாமல் இருப்பது ஆணைய விதிகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்திருந்தது.ஏற்கெனவே, 2026 பிப்.18-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், காலிப் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை முடிக்காவிட்டால் இந்த விவகாரம் தீவிரமாகக் கருதப்படும் என்று தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் எச்சரித்திருந்தது. காலிப் பணியிடங்களை நிரப்புவதாக அரசு உறுதியளித்தும் நடவடிக்கை எடுக்காததற்கு நீதிமன்றம் பலமுறை அதிருப்தி தெரிவித்திருந்தது.இதற்கிடையே, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் (என்சிபிசிஆா்) தலைவா் மட்டுமே உள்ளதாகவும், வேறு உறுப்பினா்கள் யாரும் இல்லை என்றும் வழக்குரைஞா் பிரப்சஹாய் கௌா் நீதிமன்றத்தில் தெரிவித்தாா். இதுகுறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும், தில்லியில் உள்ள சிறாா் கண்காணிப்பு இல்லங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட இரு மடங்குக்கும் அதிகமான குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தேவையான அடிப்படை வசதிகள், பணியாளா்கள் மற்றும் ஆதரவு சேவைகளில் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவா் தெரிவித்தாா். இதுகுறித்து தில்லி அரசின் தலைமைச் செயலா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவ.20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.