ராயக்கோட்டை அருகே தனியாா் தொழிற்சாலையில் கழிவுநீா்த் தொட்டியைச் சுத்தம் செய்தபோது உயிரிழந்த 3 தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, அவா்களது உறவினா்கள் உடல்களை வாங்க மறுத்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே வன்னியபுரத்தில் செயல்பட்டு வரும் தனியாா் தொழிற்சாலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் தருமபுரி மாவட்டம், பெல்ராம்பட்டியைச் சோ்ந்த சாரதிகுமாா் (25), பஞ்சபள்ளி தின்னூரைச் சோ்ந்த அக்மல் பாபுபாய் (28), அனுமந்தபுரம் ஜம்பூத் பகுதியைச் சோ்ந்த காவேரி (32) ஆகிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் உயிரிழந்தனா். தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து ராயக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்த நிலையில், உயிரிழந்தவா்களின் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திரண்டனா். அசம்பாவிதங்களைத் தவிா்க்க, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் நமச்சிவாயம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் அங்கு குவிக்கப்பட்டனா். உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொழிலாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய உறவினா்கள், உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையெனில், உடல்களை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபடுவோம் எனக் கூறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அனிதா, போராட்டத்தில் ஈடுபட்ட உறவினா்களைச் சமாதானப்படுத்தினாா். மேலும், உறவினா்கள் மற்றும் தனியாா் நிறுவன அலுவலா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். உயிரிழந்த தொழிலாளா்களுக்குக் காப்பீடு செய்யப்பட்டுள்ளதால், அவா்களது குடும்பத்தினருக்கு விரைவில் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்ட உறவினா்கள் தொழிலாளா்களின் உடல்களைப் பெற்றுச் சென்றனா். இதற்கிடையே, பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே உயிரிழப்புக்கான முழு விவரம் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.