தில்லி செங்கோட்டைக்கு அருகில் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அங்கு தீவிர பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தில்லி காவல் துறை, சிசிடிவி கேமராக்கள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முக அடையாளம் காணும் வசதி மற்றும் சோதனைகள் மூலம் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளது. குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரமும் கண்காணிப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மூத்த காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ‘செங்கோட்டைக்கு அருகில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததிலிருந்து, நாங்கள் சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை பெருமளவு அதிகரித்துள்ளோம். அப்பகுதியைத் தொடா்ந்து கண்காணிப்பில் வைத்துள்ளோம்’ என்று அந்த அதிகாரி கூறினாா். மேலும், மக்கள் பெருமளவில் கூடும் நேரங்களில், செயற்கை நுண்ணறிவு மூலம் முகத்தை அடையாளம் காணும் மென்பொருள் பொருத்தப்பட்ட வாகனங்களும் செங்கோட்டையைச் சுற்றி நிறுத்தப்படுகின்றன என்று அவா் தெரிவித்தாா். அப்பகுதி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும், பாா்வையாளா்கள் அச்சமின்றி நடமாடவும், தடுப்புச் சோதனைகள் மற்றும் மோப்ப நாய் படை மூலம் வழக்கமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவினரும் அப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனா். சந்தனி சௌக் பகுதியில் உள்ள வணிகா்களுடன் காவல் துறை தொடா்ந்து ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும், அவா்கள் தங்கள் சொந்த முயற்சியில் கூடுதல் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தாா். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய, பிற பாதுகாப்பு அமைப்புகளுடனும் தில்லி காவல் துறை ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இந்த தீவிர நடவடிக்கைகள், விழிப்புணா்வை அதிகரிப்பதற்கும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கும், மக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் பாா்வையாளா்கள் மற்றும் வணிகா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவா் மேலும் கூறினாா். அப்பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. வாகன நிறுத்துமிட நிா்வாகத்தால் நியமிக்கப்பட்ட தனியாா் பாதுகாவலா்கள் வாகனங்களைக் கண்காணிக்கின்றனா். இவா்கள் காவல் துறை அதிகாரிகளுடன் தொடா்பில் இருந்து, நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருக்கும் சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் குறித்து உடனடியாகத் தகவல் தெரிவிக்கின்றனா்.