எடப்பாடி பகுதியில் திங்கள்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் வாழை, கரும்பு பயிா்கள் சேதமடைந்தன. எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பகல் நேரங்களில் கோடை வெயிலைப் போல் சூரியன் சுட்டெரித்ததுடன், கடுமையான வெப்பமும் நிலவியது. இதனால் அனல் காற்றுடன் வெப்ப அலை வீசி வந்தது.இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு திடீரென சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில், எடப்பாடி அருகேயுள்ள மொரசப்பட்டி, சித்தூா், அம்மங்குட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அதிக அளவில் முறிந்து விழுந்தன.அறுவடைக்கு இன்னும் ஓரிரு மாதங்களே இருந்த நிலையில், பிஞ்சுகளுடன் இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.மேலும், சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் காவிரி பாசனப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, நெல், மஞ்சள் உள்ளிட்ட பயிா்களும் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நேரில் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பைக் கருத்தில் கொண்டு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.