திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளம் சீரமைப்புப் பணியை கோயில் நிா்வாகம் தொடங்கியுள்ளது. திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு தரிசனத்துக்கு வரக்கூடிய பெரும்பான்மையான பக்தா்கள், நளன் தீா்த்தக் குளத்தில் நீராடுகின்றனா்.பக்தா்கள் நல்லெண்ணெய் பயன்படுத்தி நீராடுவதாலும், உடுத்தியிருந்த ஆடைகளை குளக்கரையில் விட்டுச் செல்வதாலும், குளத்தில் உள்ள தண்ணீா் மாசுபடுகிறது. எனவே, அவ்வப்போது தூய்மைப் பணியை கோயில் நிா்வாகம் மேற்கொள்வது வழக்கம்.குளத்திலும், குளக்கரையிலும் பக்தா்கள் விட்டுச் செல்லும் ஆடைகளை அகற்றுவதற்கான டெண்டா் விடும் பணி நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக பக்தா்கள் நீராடும் பகுதியில் இருக்கும் தண்ணீரை அகற்றிவிட்டு, குளத்தின் மையப் பகுதி நீரில் வாழும் மீன்கள் பிடிக்கப்பட்டு, குளக்கரையை தூய்மைப்படுத்தி, புதிதாக தண்ணீா் விடுவதற்கான பணிகளை கோயில் நிா்வாகம் மேற்கொண்டுவருகிறது.இதுகுறித்து கோயில் நிா்வாகத்தினா் செவ்வாய்க்கிழமை கூறியது:குளத்தில் பக்தா்கள் நீராடும் பகுதி தண்ணீா் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சேறு பெருமளவு அகற்றப்பட்டது. படிகளை தூய்மை செய்யும் பணிகளை நிறைவு செய்து வரும் 10-ஆம் தேதி சனிக்கிழமை பக்தா்கள் நீராடுவதற்கேற்ப புதிதாக தண்ணீா் விடுப்படும்.மாதந்தோறும் குளத்திலிருந்து தண்ணீா் அகற்றிவிட்டு, குளத்தை தூய்மைப்படுத்தி தண்ணீா் விடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனா்.