‘முதுகில் குத்தும் தவெக அரசுக்கு செவிலியர்கள்தான் இரையா?’ - மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்

Wait 5 sec.

கண்துடைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, முதுகில் குத்தும் தவெக அரசு என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.பணிப் பாதுகாப்பு, சமவேலைக்கு சம ஊதியம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளா் சங்கத்தினர் சென்னையில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் செவிலியர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில், இந்தச் சம்பவத்துக்கு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்தப் பதிவில், “கண்துடைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, முதுகில் குத்தும் த.வெ.க. அரசின் துரோகத்திற்குச் செவிலியர்கள்தான் தற்போதைய இரையா? பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காக அறவழியில் போராடிய செவிலியர்களைக் காவல்துறையைக் கொண்டு கைது செய்த த.வெ.க. அரசின் அராஜக நடவடிக்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். போராடும் செவிலியர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திட மனம் வராத துரோக த.வெ.க. அரசுக்கு, ஈவு இரக்கமின்றி அவர்களைக் கைது செய்ய மட்டும் எப்படி மனம் வந்ததோ? போராடிய செவிலியர்களின் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கைது செய்ததாக அவர்களது சட்ட ஆலோசகரே குற்றம்சாட்டியிருக்கிறார். தொடர்ந்து, போராட்டக் களத்திலிருந்த செவிலியர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டக் களத்திற்குச் சென்று ஆதரவு; தேர்தல் வந்தபோது பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி; ஆட்சிக்கு வந்ததும் அதே கோரிக்கையை முன்வைத்தால் காவல்துறை நடவடிக்கை! முரண்பாட்டு மூட்டையாக விளங்கும் முதல்வர் விஜய்யும், அவரது நிர்வாகத் திறனற்ற துக்ளக் நடவடிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்கும் அதிமேதாவி அமைச்சர்களும் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்? போராட்டக் களத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த செவிலியர்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாகக் கைது செய்ததுதான் த.வெ.க. கூறும் ‘மாற்றமா’? இதுதான் அவர்கள் போற்றும் ஜனநாயகமா? போராடிய செவிலியர்களை நோக்கி பெண் காவல் அதிகாரி ஒருவரே விரலை உயர்த்தி “வேண்டாம் உங்க உயிர் முக்கியம்” என மிரட்டியதுதான் ஜனநாயக வில்லனின் குரலா என்பதைக் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் விளக்குவாரா? அல்லது, செவிலியர்களை மிரட்டி குண்டுகட்டாகக் கைது செய்த பெண் காவலர்களின் செயலை “சிங்கப்பெண் in action” என ரீல்ஸ் செய்து தனது விர்ச்சுவல் அபியூசர்கள் (virtual abuser) மூலம் trend செய்து விளம்பரம் தேடுவாரா?” எனப் பதிவிட்டுள்ளார்.DMK leader M.K. Stalin has strongly condemned the TVK government, accusing it of stabbing people in the back and casting to the wind the promises made merely as a sham.