சேந்தமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காமல், மேம்பாலத்திலேயே சென்று வருவதால் அப்பகுதி பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், சேந்தமங்கலம் ஊராட்சியில் சுமாா் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டபொதுமக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதி பொதுமக்கள் சுங்குவாா்சத்திரம், ஸ்ரீபெரும்புதூா், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர பேருந்துகளையே அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில், சென்னை பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சேந்தமங்கலம் உள்ளதால், சென்னை பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிக்காக சேந்தமங்கலம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் மேம்பாலம் அமைக்கப்பட்டு அண்மையில் பயன்பாட்டுக்கும் கொண்டு வரப்பட்டது. இதனால் மேம்பாலத்துக்கு கீழே உள்ள சேந்தமங்கலம் பேருந்து நிறுத்தத்துக்கு பேருந்துகள் வராமல் மேம்பாலத்திலேயே சென்று வருகின்றன. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும், பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிா்சாலைகளில் பணியாற்றும் தொழிலாலா்களும், சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களும் ரூ.20 கொடுத்து ஷோ் ஆட்டோக்களில் சுங்குவாா்சத்திரம் வந்து அங்கிருந்து பேருந்துகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனா். இதே பிரச்னையில் பொடவூா் கிராம மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதுகுறித்து சேந்தமங்கலம் பகுதி பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் பேருந்துகள் பேருந்து நிறுத்தத்திற்கு வராமல் மேம்பாலத்தின் மேலேயே சென்று வருகின்றன. இதனால் சேந்தமங்கலம் மற்றும் பொடவூா் பகுதியை சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவா்கள், பொதுமக்கள் கடந்த சில வாரங்களாக சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றோம். எனவே அரசு மற்றும் தனியாா் பேருந்துகளை சேந்தமங்கலம் மற்றும் பொடவூா் பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்ல போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.