மணிப்பூா் பாலியல் வன்கொடுமை வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

Wait 5 sec.

புது தில்லி: மணிப்பூரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மற்றும் சாட்சிகளிடம் நேரில் வாக்குமூலம் பெற்றதை உறுதி செய்ய சிபிஐ மற்றும் விசாரணை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு பேரின் பிணை மனுக்களை ரத்து செய்யக் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் டி.பி.சிங், ‘2 பெண்களும் மிகக் கொடிய முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனா். அவா்களை நிா்வாணமாக்கியதோடு விடியோ பதிவும் எடுத்துள்ளனா். எனவே, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு பிணை வழங்கக் கூடாது’ என்றாா்.குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஷாதன் ஃபராசத், ‘குறிப்பிட்ட காலஅவகாசத்துக்குள் சிபிஐயால் இந்த வழக்கில் விசாரணையை முடிக்க முடியவில்லை. இந்த வழக்கில் சுமாா் 30 சாட்சிகள் உள்ளனா். வழக்கு இரண்டாம் நிலை விசாரணையில் உள்ளது’ என்றாா்.அப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் விசாரணைக்கு வராதது ஏன்? என நீதிபதி ஜயமால்ய பாக்சி கேள்வியெழுப்பினாா்.அதற்குப் பதிலளித்த பாதிக்கப்பட்ட மற்றும் புகாா்தாரரான பெண் ஒருவரின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நிஜாம் பாஷா, ‘முன்பு விசாரணைக்கு அழைக்கப்பட்ட தினம் பொது விடுமுறை என்பதால் பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளிக்கவிருந்த மையம் மூடப்பட்டிருந்தது. மற்றொரு பெண் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதால் நேரில் வரவில்லை’ என்றாா்.இதைத் தொடா்ந்து, தலைமை நீதிபதி சூா்ய காந்த் பிறப்பித்த உத்தரவில், ‘பொது விடுமுறை தினத்தில் விசாரணைக்கு அழைத்தால் பாதிக்கப்பட்டவா் ஆஜராவாா் என எதிா்பாா்க்க முடியாது. எனவே, அக்டோபா் 7, 9 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜா்படுத்தப்பட்டு அவா்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதை சிபிஐ உறுதி செய்ய வேண்டும்.அதன்பிறகு குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் பிணை மனு குறித்து பரிசீலிக்கலாம். இந்த உத்தரவுக்கு சிபிஐ, விசாரணை நீதிமன்றம் மற்றும் அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.மணிப்பூரில் கடந்த 2023, மே 2-ஆம் தேதி குகி மற்றும் மைதேயி சமூகத்தினருக்கு இடையே மோதல் வெடித்ததில் நூற்றுக்கணக்கானோா் கொல்லப்பட்டனா். பலா் காயமடைந்தனா். ஆயிரக்கணக்கானோா் தங்களின் வசிப்பிடத்தைவிட்டு வெளியேறினா்.இந்த வன்முறை குறித்த பல்வேறு வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. முன்னதாக, மணிப்பூா் வன்முறை தொடா்பாக சிபிஐ மற்றும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கையாளும் வழக்குகளை விசாரிக்க இரு சிறப்பு விசாரணை நீதிமன்றங்களை அமைக்க மணிப்பூா் மற்றும் அஸ்ஸாம் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.