செயற்கை நுண்ணறிவு அல்லது செய்யறிவால் ஏற்படும் பேரிடர்களிலிருந்து தற்காத்துக் கொள்ள அணுசக்தித் துறைகளில் உள்ளதைப் போன்ற பல அடுக்குப் பாதுகாப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எச்சரிக்கை மணியுடன், ஓபன் ஏஐ மென்பொறியாளர் வெளியிட்ட ராஜிநாமா கடிதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.ஒரு பக்கம் உலகமே செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் அபாயங்களை வெளிப்படுத்தி வரும் நிலையில், அண்மையில் அமெரிக்க அதிபரோ செயற்கை நுண்ணறிவுக்கு பதவி உயர்வு கொடுத்து சூப்பர் நுண்ணறிவு என்று கௌரவித்து மகிழ்ந்துள்ளார்.ஏற்கனவே ஏஐ துறையின் மென்பொறியாளர்கள் சிலர், மிக முக்கிய எச்சரிக்கைகளை வெளியிட்டு தங்களது பதவியை ராஜிநாமா செய்திருக்கும் நிலையில், பேரிடர் காலம் அல்லது அணுசக்தித் துறைகளில் உள்ளதைப் போன்ற அபாய நேரத்தில் பயன்படுத்தப்படும் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தொழில்நுட்பத் துறையும் பின்பற்ற வேண்டும் என்று கூறி, ஓபன் ஏஐ மென்பொறியாளர் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார்.அதாவது, செயற்கை நுண்ணறிவை அடுத்தக்கட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கு முன்பு, அதனால் ஏற்படும் அபாயத்தின்போது தற்காத்துக் கொள்ளும் பாதுகாப்பு முறைகளை உருவாக்க வேண்டும் என்று ஏற்கனவே ஒலித்து வரும் குரல்களுடன் இவரது குரலும் இணைந்துள்ளது.தி அட்லாண்டிக் இதழில் டேவிட் ராபின்சன் வெளியிட்டிருக்கும் கட்டுரையில், செயற்கை நுண்ணறிவு குறித்து உலகம் முழுவதும் எழும் எச்சரிக்கைகளை குறிப்பிட்டுள்ளதோடு, ஏஐ ஏஜெண்டுகள் வேகமாக உருவாகி வருகின்றன, அவை மனிதர்களின் படைப்புகளையும் தாண்டி புத்திசாலித்தனமாக மாறிவிடுவதால், நினைத்துப் பார்க்க முடியாத அளவில், மிகக் கூடிய விரைவில் மனிதர்களின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிக்கும் ஏஐ ஏஜெண்டுகள் மனிதகுலத்தின் அழிவுக்கு வித்திடும் என்கிறார்.கடந்த ஒரு சில மாதங்களில் பல முறை செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் கட்டுப்பாடுகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டு, தப்புவிக்கவும் முயன்றன. நல்வாய்ப்பாக அவை கட்டுப்படுத்தப்பட்டாலும், மீண்டும் அது தொடரும் என நம்ப முடியாது. மிக வேகமாக செயல்படும் செயற்கை நுண்ணறிவுத் திறன்களை உருவாக்கும் நிறுவனங்கள், அதனால் ஏற்படும் அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்ள பாதுகாப்பு அமைப்புகளை ஏற்படுத்தவில்லை, உண்மையில் அதனை உருவாக்கும் நிறுவனங்கள் அதனால் ஏற்படும் அபாயங்களை உணர்ந்திருந்தும் உணராததுபோலவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.ஓபன் ஏஐ-ல் அதிக நாள்கள் பணியாற்றிய மென்பொறியாளரான தான், அதன் அபாயங்களை நன்கு உணர்ந்திருப்பதாகவும், மனிதன் எதற்காக உருவாக்கினானோ அதற்கு நேர்மாறாக செய்யறிவுகள் திரும்பும் காலம் நெருங்கிவிட்டது என்கிறார்.எனவே, அதிநவீன செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள், விமானப் போக்குவரத்து அல்லது அணுசக்தித் துறையைப் போல, கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கவனமான திட்டமிடலுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.செயற்கை நுண்ணறி தற்போது மனிதர்களை ஏமாற்றக் கற்றுக்கொண்டுவிட்டது. விரைவில் அது மனித குலத்துக்கு அழிவை ஏற்படுத்தவும் கற்றுக் கொள்ளும். உண்மையல் அவை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுதான் இன்றைய கவலை என்கிறார்.இதற்கிடையேதான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செய்யறிவை கட்டுப்படுத்த வேண்டும், அதன் வளர்ச்சியை மட்டுப்படுத்த வேண்டும் என்ற கூற்றை எதிர்ப்பதோடு, அது ஆபத்தானது என்ற விமர்சனமே ஒரு வதந்தி என்று வெளியிட்டிருக்கும் கருத்துகள் பேசுபொருளாகியிருக்கின்றன.