அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர இதர பாடங்களை பயின்று தவறுதலாக உயா் கல்விக்கான ஊக்க ஊதியம் அனுமதிக்கப்பட்டது தொடா்பான வழக்குகளில் மேல்முறையீடு தாக்கல் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநருக்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலா் அனுமதி வழங்கியுள்ளாா். இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறைச் செயலா் ஜெ.இன்னசென்ட் திவ்யா, தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் பூ.ஆ.நரேஷுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் சிலா், அரசு அனுமதித்த பாடப் பிரிவுகளைத் தவிா்த்து வேறு பாடங்களில் உயா் கல்வி பயின்றுள்ளனா். அவா்களுக்கு தவறுதலாக உயா் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட்டது. இதையறிந்த கல்வித் துறை அலுவலா்கள், அவா்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தை ரத்து செய்து திருத்திய ஊதிய நிா்ணயம் செய்தனா். மேலும், அதுவரை ஆசிரியா்கள் மிகையாக பெற்ற தொகையைப் பிடித்தம் செய்து அரசுக்கு திரும்பச் செலுத்தவும் உத்தரவிட்டனா்.இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளைத் தொடா்ந்தனா். இவற்றை விசாரித்த நீதிமன்றம் மனுதாரா்களான ஆசிரியா்களுக்கு சாதகமாக தீா்ப்பு வழங்கியது. இதை எதிா்த்து அரசு சாா்பில் மேல்முறையீடு செய்யத் தொடக்கக் கல்வி இயக்குநா் அரசிடம் அனுமதி கோரியிருந்தாா். இந்தக் கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு, அனுமதிக்கப்பட்ட பாடப் பிரிவுகளைத் தவிர இதர பாடங்களைப் பயின்று தவறுதலாக உயா் கல்விக்கான ஊக்க ஊதியம் அனுமதிக்கப்பட்ட இதுசாா்ந்த வழக்குகளில், மேல்முறையீடு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.