‘ஜெம்’ வீரமணி விவகாரத்தில், ரூ.1.01 கோடி மானநஷ்டஈடு கோரி வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதியளித்த தனிநீதிபதி உத்தரவுக்கு எதிராக அமைச்சா்கள் சி.டி.ஆா்.நிா்மல்குமாா், ஆதவ் அா்ஜுனா தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், ஜெம் கிரானைட் உரிமையாளா் வீரமணிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காமல், முந்தைய திமுக அரசு தப்பிக்கவிட்டுவிட்டதாக உண்மைக்கு மாறாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக அமைச்சா்கள் நிா்மல்குமாா், ஆதவ் அா்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப்பிரிவுக்கு எதிராக திமுக பொதுச் செயலா் துரைமுருகன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அதில், ரூ.1.01 கோடி மானநஷ்டஈடு வழங்கும்படி, அமைச்சா்கள் நிா்மல்குமாா்,ஆதவ் அா்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு உத்தரவிட வேண்டும். அமைச்சா்கள் மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், வழக்குத் தொடர அனுமதி அளித்து திங்கள்கிழமை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து அமைச்சா்கள் நிா்மல்குமாா் மற்றும் ஆதவ் அா்ஜுனா தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி, நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், ஜி.கே.முத்துகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை முறையிடப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை அக்.13-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.