சைபர் மோசடியாளர்களுக்கு தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை பயன்படுத்த அனுமதித்ததற்காக 5 பேரை புணே போலீசார் கைது செய்துள்ளனர்.பொதுமக்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி பல்வேறு வகைகளில் ஆன்லைன் வழியாக மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அதனால்தான் வங்கிக் கணக்கு விவரங்கள், ஏடிஎம் பின் நம்பர், ஓடிபி ஆகியவற்றை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று வங்கிகள் மூலமாகவும் சைபர் குற்றப்பிரிவு மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.ஆனால், புணேவைச் சேர்ந்த சிலர் பணத்திற்காக தங்கள் வங்கிக் கணக்குகளை மோசடிக்கு பயன்படுத்த அனுமதித்துள்ளனர். இந்த வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி, நாடு முழுவதும் 19 பேரிடம் மொத்தம் 1.8 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தை டெபாசிட் செய்யத் தங்கள் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்த அனுமதித்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பணம் வழங்கப்பட்டுள்ளது. சைபர் மோசடிகளுக்கு பயன்படுத்தும் வங்கி கணக்குகள் 'மியூல் கணக்குகள்' என்று கூறப்படுகிறது. ஷ்ரவன் ராஜேந்திர அங்குஷ் (25), ஹரியோம் ஹரிராம் சாஹு (24), இடஃபான் ஷேக் (23), சாஹில் ரவூஃப் ஷேக் (25), தாலிப் நூர்முகமது ஷேக் (25) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே இளைஞர்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற மோசடிக்கு வங்கிக்கணக்கு விவரங்களைக் கொடுத்தால் அதுவும் குற்றம் என்பதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர். Five held for providing mule accounts to cyber fraudsters