ஒத்திப்போடுவதில் அர்த்தமில்லை!

Wait 5 sec.

ஐக்கிய வங்கிகளின் கூட்டமைப்பின் சார்பில்,வங்கி ஊழியர்கள் 'வாரத்தில் ஐந்து நாள்கள் வேலை' கோரி அறிவித்த வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க பேங்க் ஆப் இந்தியா நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ரஜ்னீஷ் கர்நாட்டக் தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அளிக்கும் அறிக்கையைப் பரிசீலித்து ரிசர்வ் வங்கி முன்மொழியும் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சகம் இறுதி முடிவை அறிவிக்கும். 2015 முதல் வங்கிகள் வார நாள்களுடன் மாதத்தின் முதல், மூன்றாவது மற்றும் சில மாதங்களில் 5-ஆவது சனிக்கிழமை களிலும் இயங்கி வருகின்றன. 2024 மார்ச் மாதம் நடந்த பேச்சுவார்த்தையில் வார நாள்களில் 40 நிமிஷங்கள் கூடுதலாக வேலை செய்வதாகவும், எல்லா சனிக்கிழமைகளும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் அரசிடம் வங்கி ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைத்தன. அது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்காமல் இருந்ததால்தான் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.வார நாள்கள் முழுவதும் கடினமான பணிச்சூழல் மற்றும் இலக்குகளை நிறைவேற்ற வேண்டிய நெருக்கடியில் இருக்கும் ஊழியர்கள் வார இறுதியில் தொடர்ந்து இரண்டு நாள்கள் ஓய்வில் இருப்பதும், குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதும் அடுத்த வாரத்தில் அவர்களது வேலைத் திறனை அதிகரிக்க உதவும்; அலுவலக பணிச்சூழலையும் மேம்படுத்தும் என்பது இந்த கோரிக்கைக்கான காரணம். ரிசர்வ் வங்கி, மத்திய , மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் போன்றவற்றின் ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே வேலை செய்து சிறப்பான சேவையாற்றி வருவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வங்கிகள் வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே இயங்கி வருவதைச் சுட்டிக்காட்டி, உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவும் அணி வகுக்கலாமே என்பது அவர்களது வாதம். வங்கிப் பரிவர்த்தனைகள் எண்மமயமாகியுள்ளதால், வங்கிகளின் ஐந்து நாள் வேலை வாடிக்கையாளர்களைப் பாதிக்காது என்பது முற்றிலுமாக ஏற்புடையதல்ல. கிராமங்களில் செயல்பட்டுவரும் வங்கிகளுக்கும் அப்பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கும் இன்னமும் தொழில்நுட்ப வசதிகள் முழுமையாகச் சென்றடையவில்லை. கல்வி அறிவு இல்லாத ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களும் தற்போது அரசு திட்டப் பலன்களுக்காக வங்கி சேவையை பெருமளவு சார்ந்துள்ளனர். நகர்ப்புறங்களில்கூட ஓய்வூதியம் பெறும் முதியோர், சிறு தொழில் மற்றும் வீட்டு வேலை செய்வோர் என ஏராளமானவர்கள் நேரடியாக வங்கிக்கு வந்து சேவையைப் பெறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதை மறந்துவிடக் கூடாது. நாடு முழுவதும் அனைத்து வங்கிகளிலும் சுமார் 90 கோடி மக்களுக்கு சுமார் 250 கோடி கணக்குகள் உள்ளன. அதிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லாத பிரதமரின் ஜன்தன் யோஜனா கணக்கு மட்டும் சுமார் 59 கோடி உள்ளது. அவர்கள் அனைவரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வங்கி சேவையை பெற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. எனவே, தொழில்நுட்பத்தைக் காரணம் காட்டி வங்கி ஊழியர்கள் 'ஐந்து நாள் வேலை' கோருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மின் கட்டணம், பராமரிப்புச் செலவு, போக்குவரத்துக்கான எரிபொருள் ஆகியவற்றில் சேமிப்பு ஏற்படும் எனக் காரணங்களை அடுக்கும்போது, அரசுத் துறை வங்கிகள் பொதுமக்களுக்கு சேவையாற்றுவதற்கான பொருளாதார அமைப்பு என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். தொழில்நுட்பம் அவர்களது பணிச் சுமையைக் கணிசமாகக் குறைத்திருப்பதற்கு ஏற்ப அவர்களது ஊதியத்திலும் சலுகைகளிலும் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது. வாரத்தில் ஐந்து நாள் வேலைமூலம் ஊழியர்களின் ஊதியம் மற்றும் சலுகையில் எவ்விதச் சேமிப்பும் ஏற்படப் போவதில்லை. கடந்த 2019 முதல் 2026 வரையிலான நிதியாண்டுகளில் தனியார் வங்கிகளின் வர்த்தக வளர்ச்சியில் தனி ஒரு ஊழியரின் பங்களிப்பு ரூ. 19 கோடி என்றால், பொதுத்துறை வங்கிகளின் ஊழியரின் பங்களிப்பு ரூ. 17 கோடி மட்டுமே என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டும் வேலை செய்யும்போது வாடிக்கையாளர்களின் கூடுதல் வருகைக்கு ஏற்ப, ஊழியர்கள் பணி அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடலாம். எந்த பொதுத் துறை வங்கியிலும் முழுமையான எண்ணிக்கையில் ஊழியர்கள் இல்லை. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 40,000 பேருக்கு பல்வேறு நிலைகளில் வங்கி பணி வாய்ப்புகள் உள்ளதாக கூறும் ஆய்வு முடிவுகள், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையை உணர்த்துகின்றன. ரஜ்னீஷ் கர்நாட்டக் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. அந்தக் குழு குறிப்பிட்ட கால வரம்பில் தனது அறிக்கையை வெளியிடுவதும், அதனடிப்படையில் முடிவெடுப்பதும் அவசியம். இல்லையென்றால், குழு அமைப்பதால், எந்தவிதப் பலனும் இல்லை. வங்கி ஊழியர்கள் சங்கம் வேலை நிறுத்த முடிவை ஒத்திவைத்து முடிவெடுப்பதற்கான அவகாசத்தை அரசுக்கு வழங்கியிருக்கிறது. இந்த வங்கிகள் கூட்டமைப்பும் அரசும் பிரச்னையை மேலும் ஒத்திப்போடாமல், விரைந்து முடிவெடுப்பதன்மூலம் வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தெளிவான விடை பகர வேண்டும்.*****திருக்குறள் (எண் 672) அதிகாரம்: வினைசெயல்வகைதூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்கதூங்காது செய்யும் வினை.காலந்தாழ்த்திச் செய்யத் தக்கவற்றைக் காலந் தாழ்ந்தே செய்ய வேண்டும். காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்ய வேண்டிய செயல்களைச் செய்யக் காலந்தாழ்த்தக் கூடாது.