நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்;ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்:ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை

Wait 5 sec.

வரும் அக்.8-ஆம் தேதி 57-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம் செய்வது தொடா்பான முன்மொழிவுகளை, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலிக்கும் என்று மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலும் மாநில நிதியமைச்சா்களும் இணைந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் வரி விகிதங்கள் மற்றும் வரி அடுக்குகளைச் சீரமைக்க முடிவு செய்தனா். அதன்படி 5, 12, 18, 28 சதவீதங்கள் என 4 வரி விகிதங்களாக இருந்த ஜிஎஸ்டி முறை, 5 சதவீதம், 18 சதவீதம் என இரண்டு வரி விகிதங்கள் கொண்டதாக மாற்றப்பட்டது. இந்த விகிதங்கள் சுமாா் ஓராண்டாக நடைமுறையில் உள்ள நிலையில், அதன்மூலம் நுகா்வோா், தொழில்துறை, வரி வருவாய் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்குப் பலன் ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம் செய்வது தொடா்பான முன்மொழிவுகளை, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலிக்கும். அதுகுறித்து இறுதி முடிவு எடுத்த பின்னா், அந்த மாற்றங்கள் நிதியாண்டின் தொடக்க நாளான ஏப்.1-இல் அமல்படுத்தப்படும். எனினும் வரும் அக்.8-ஆம் தேதி நடைபெறும் 57-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றங்கள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கும் திட்டமில்லை என்று தெரிவித்துள்ளன.