தமிழ்நாட்டில் இருந்து கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு விதித்த தடை செல்லாது என்று சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது. இதைக் கேள்விப்படும் அனைவருக்கும் நீதிமன்றமே இவ்வாறு சொல்கிா என வியப்பு ஏற்படலாம். தமிழகத்தின் ஆற்றுமணலும் மலைகளின் பாறைகளும் தமிழா்களுக்குப் பயன்படுவதைக் காட்டிலும், மாற்றாருக்கு பயன்படுவதே அதிகம் என்பதைக் காணும் எவருக்கும் அறச்சீற்றம் ஏற்படாமல் இருக்காது. தமிழ்நாட்டில் இருந்து ஆற்றுமணல் மற்றும் மலைகளை உடைத்து, கருங்கற்களை ஜல்லிகளாக மாற்றி கேரள மாநிலத்துக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்று அதிக லாபம் பாா்க்கும் வணிகம் கடந்த பல ஆண்டுகளாக தொடா்ந்து, தொய்வின்றி நடந்து கொண்டிருக்கிறது.இதைவிட மிகவும் வருந்தத்தக்க விஷயம், இந்த மணலும் ஜல்லிகளும் மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு, மேலும் பல கோடி ரூபாய் லாபத்தில் கேரளத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் கனிமங்களை விற்கவும் மலைகளை உடைக்கவும் அனுமதி பெற்ற சில நிறுவனங்களே வேறு பெயரில் கேரளத்தில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, இந்த மணல் ஜல்லியை அங்கிருந்து ஏற்றுமதி செய்கின்றன.தமிழக பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று புதிதாக ஆட்சிக்கு வந்த தவெக அரசு, இந்த விவகாரத்தில் தலையிட்டு, தடுக்க முயன்றது. தற்போதைய ஒப்பந்ததாரா்கள் அனைவரும் முந்தைய அரசில் அனுமதி பெற்றவா்கள். அவா்களைக் கட்டுப்படுத்த, கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்லக் கூடாது என்று கடந்த ஜூலை 27-ஆம் தேதி தடையாணை பிறப்பித்தது ஜோசப் விஜய் அரசு. தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கனிமம் எடுத்தல், கொண்டு செல்லுதல், சேகரித்து வைத்தல் ஆகியவற்றில் ஈடுபடும் கனிம விற்பனையாளா்கள் சட்டம் 2011-இன் விதி 3ஏ-படி தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது.அந்தத் தடை அரசு அனுமதித்த ஒப்பந்த விதிகளுக்கு மாறானது என்றும், அரசின் தடை உத்தரவு, சட்டவிரோதமாக மணல் எடுத்தல் மற்றும் மலை உடைத்தல் ஆகியவற்றுக்குத்தான் பொருந்துமே தவிர, சட்டப்படி ஒப்பந்தம் பெற்றவா்களுக்குப் பொருந்தாது என்றும், அவா்கள் வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்வதைத் தடுப்பது அரசியல் சாசனம் வழங்கும் வா்த்தக உரிமைக்கு குந்தகமாக அமையும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. தனக்கு முன்னால் வைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட நீதிமன்றத்தின் தீா்ப்வை நாம் விமா்சிக்க முடியாது.தமிழக அரசு இத்தகைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது, ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக வெட்டி எடுத்தால், ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கூடிய உரிமை பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் கனிமம் வெட்டி எடுக்க உரிமம் பெற்ற எந்த ஒரு நிறுவனமும், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக வெட்டியெடுத்த குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க இயலாது. நோ்மையாகச் செயல்பட்ட ஒப்பந்ததாரா்கள் மிகச் சிலராகவே இருப்பாா்கள். ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, புதிய ஒப்பந்தம் கோரும்போது தமிழ்நாடு தவிர வேறு மாநிலங்களுக்கு கொண்டுசெல்லக் கூடாது என்ற விதிமுறையைச் சோ்க்க முடியும். இதற்கு விருப்பம் இருப்பவா்கள் மட்டுமே ஒப்பந்தப்புள்ளி கோரச் செய்திருக்கலாம்.தமிழக அரசு ஆற்று மணலை விற்கின்றபோதும், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் பலமடங்கு மணல் அள்ளப்பட்டதாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது. இதற்கான விசாரணைக்கு மாவட்ட ஆட்சியா்கள் ஒத்துழைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் புகாா் சொல்லப்பட்டது. இந்த விவகாரம் வாய்தா பெற்று காலத்தால் மறக்கடிக்கப்பட்டது. யாரும் இதுவரை தண்டனை பெறவில்லை.அரசு காட்டிய கணக்குக்கும் தோண்டப்பட்ட அளவுக்கும் வேறுபாடு இருப்பதற்கு முக்கியமான ஆதாரம் கிடைத்ததாகவும், அதை அதிகாரிகள் முறையாகப் பதிவு செய்யவில்லை என்றும் விசாரணை அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது. பல மடங்கு அதிகமாக மணல் அள்ளுவதற்காக வாங்கப்பட்ட சக்திவாய்ந்த ராட்சத ஜேசிபி வாகனங்கள், வாரண்ட்டி காலம் முடியும் வரை பயன்பாட்டில் இருந்ததைத் தொடா்புடைய வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து பெறமுடியும். அந்த இயந்திரம் இயங்கிய காலத்தில் அள்ளப்பட்டிருக்கக்கூடிய உத்தேச மணல் அளவும், கணக்கில் காட்டப்பட்டுள்ள மணல் விற்பனை அளவும் பொருந்திப் போகவில்லை என்பதை அமலாக்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனா். ஆனால், இந்த உண்மைகள் முறையாகப் பதிவு செய்யப்படாமல் மணலில் மூடி மறைக்கப்பட்டது; இப்போது மறக்கடிக்கப்படுகிறது.தமிழக ஆற்று மணலை விற்கும்போது, தமிழகத்தில் எந்த கட்டுமானப் பணிக்காக வாங்கப்படுகிறது என்பதைப் பதிவு செய்து, அது அதற்குத்தான் பயன்படுத்தப்பட்டதா என்பதை உறுதி செய்வதன் மூலம் பெருமளவு நம் கனிமச் செல்வம் கொள்ளை போவதைத் தடுக்கலாம். நீதிமன்றத் தீா்ப்பால் தவெக அரசு தயங்கி நின்றுவிடாமல், ஒப்பந்தங்கள் மீறப்பட்டுள்ளதை விசாரணையில் கண்டறிந்து ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வாய்ப்புகளை இழந்துவிடக் கூடாது.கனிம வளங்கள் வருங்கால சந்ததியினருக்கும் சொந்தமானவை. அதை முற்றிலுமாக அபகரித்து பயன்படுத்தும் உரிமை நமக்குக் கிடையாது.