தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு நியமன ஒப்புதல் வழங்கிய விவகாரம் தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.தூத்துக்குடியைச் சோ்ந்த பாஸ்கரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அரசு நிதியுதவி பெற்று செயல்பட்டு வரும் வள்ளியம்மையாா் பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் 63 மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனா். கடந்த 2018-ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணையின்படி, ஒரு பள்ளியில் குறைந்தபட்சம் 250 மாணவா்கள் பயின்றால் மட்டுமே ஆசிரியரல்லாத இதர அலுவலகப் பணியாளா்களை நியமிக்க முடியும்.இந்த நிலையில், தற்போதைய தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரா. சங்கீதா சின்னராணி, 2025-26 கல்வி ஆண்டுக்கான பணியாளா் நியமன ஆணையை கடந்த ஜூலை 24-ஆம் தேதி தன்னிச்சையாகத் திருத்தி வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து, காவலா், அலுவலக உதவியாளா், பதிவறை எழுத்தா் ஆகிய காலிப் பணியிடங்களை, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாக அங்கீகரித்து 2025-26, 2026-27 கல்வி ஆண்டுகளுக்கு ஆணை பிறப்பித்துள்ளாா். இது சட்டவிரோதமானது. இதனால், அரசுக்கு பெரியளவில் நிதி இழப்பு ஏற்படும் என்பதால், இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இந்த விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரா. சங்கீதா சின்னராணி, சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகம் ஆகியோருக்கு குறிப்பாணை அனுப்ப வேண்டும். மேலும், இந்த வழக்கு முடியும் வரை முதன்மைக் கல்வி அலுவலா் சம்பந்தப்பட்ட பள்ளியில் எந்தவிதப் பணி நியமனங்களை மேற்கொள்ளவோ அல்லது காலிப் பணியிடங்களை நிரப்பவோ இடைக்காலத் தடைவிதிக்கப்படுகிறது. மேலும், முதன்மைக் கல்வி அலுவலா் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.