200 கி.மீ.க்கு பாதசாரிகள் வலையமைப்பு: மாநகராட்சி ஆணையர்

Wait 5 sec.

சென்னை மாநகராட்சியில் 200 கி.மீ.க்கு பாதசாரிகள் வலையமைப்பு அமைக்கப்படும் என ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.சென்னையில் சி -40 அமைப்பு சார்பில் அதன் 20-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கால நிலை சார்ந்த நகர்ப்புற திட்டமிடல் மாநாடு தனியார் விடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை மாநகராட்சியுடன் இணைந்து நடைபெற்ற மாநாட்டில் கால நிலை செயல் வழிகாட்டி, இந்திய நகரங்களுக்கான தூய்மையான காற்று மண்டல வரைபடம் ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டன. மாநாட்டில் மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் பேசுகையில், சென்னை மாநகராட்சியின் கால நிலைச் சவால்களை எதிர்கொள்வதற்கு மெட்ரோ ரயில் நிறுவனம், ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம், மின்சார வாரியம், வருவாய்த் துறை ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவது அவசியம். மாநகராட்சியில் நீர் உறிஞ்சும் பூங்காக்கள் திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. மேலும், 200 கி.மீ.க்கு பாதசாரிகள் வலையமைப்பு ஏற்படுத்தப்படும். சி -40 அமைப்புடன் இணைந்து சென்னை மாநகரை கால நிலை மீள்திறன் கொண்ட நகராக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.நிகழ்ச்சியில் சி-40 அமைப்பு நகரங்கள் செயல் இயக்குநர் மார்க் வாட்ஸ், மண்டல இயக்குநர் நைம் கெருவாலா, இந்திய நிர்வாக இயக்குநர் அஸ்வதி திலீப், சிஎம்டிஏ தலைமைத் திட்டமிடல் அலுவலர் பி. கஜேந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.