மதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். திமுகவுடன் கூட்டணியில் இருக்கக் கூடாது என பொதுக்குழுவில் முடிவெடுத்ததன் அடிப்படையிலேயே கூட்டணியிலிருந்து வெளியேறியதாகவும், கொள்கைக்காகவே இந்த முடிவை எடுத்ததாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.முதலமைச்சர் தன்னை அண்ணன் என்று அழைத்த காரணத்தினால்தான் அவரைச் சந்திக்கச் சென்றதாகவும், இது திமுகவினருக்கு பிடிக்கவில்லை என்றும் கூறினார். முதலமைச்சருடன் நடந்து சென்றபோது தனது கையைப் பிடித்து இழுத்ததாகவும், தான் அமைச்சரைப் பார்த்து கைநீட்டிப் பேசவில்லை என்றும் விளக்கமளித்தார்.திமுகவிற்கு ஆதரவாக சில ஊடகங்கள் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய வைகோ, உண்மையான பத்திரிகையாளர்களாக இருந்தால் தனது கருத்துகளையும் வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மோடி தனக்கு அதிக வாய்ப்புகளை வழங்கியதாகவும், ஆனால் கொலைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரை அழைத்து வந்தது தவறு எனக் கூறியே கூட்டணியிலிருந்து வெளியேறியதாகவும் தெரிவித்தார்.மேலும், வடிவேலுவுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசியது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், விஜயகாந்த்தைத் தமிழகம் முழுவதும் பேச வைத்துவிட்டு, வேலை முடிந்ததும் அவரை விட்டுவிட்டதாகவும், பட வாய்ப்பு தருவதாகக் கூறி வடிவேலுவை ஏமாற்றிவிட்டதாகவும் விமர்சித்தார்.மதிமுகவை யாராலும் அழிக்கவோ, கரைக்கவோ முடியாது. கட்சியை அழிக்கக் கருணாநிதியே முயற்சி செய்ததாகவும் கூறிய வைகோ, மேகதாது பிரச்னைக்காக முதலில் போராடியவர் தான்தான் என்றும் தெரிவித்தார்.திருப்பரங்குன்றம் தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது எனக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை மற்றும் தூத்துக்குடியில் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்தும் கேள்வி எழுப்பினார். சம்பந்தப்பட்ட குற்றவாளி மூன்று முறை ஜாமீனில் வந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.கிரீஸ் நாட்டில் திருமணம் நடத்த வேண்டிய அவசியம் என்ன என்றும், ஜெயலலிதா அணிந்த நகைகள் குறித்து ஐந்து ஆண்டுகள் விமர்சித்தவர்கள் இதுபோன்ற நிகழ்வுகள் குறித்து ஏன் கேள்வி எழுப்பவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக விவாதிக்கத் தான் தயாராக இருப்பதாகவும், திமுக அதற்குத் தயாரா என்றும் சவால் விடுத்தார்.தமிழகத்தின் முதலீடுகள் ஆந்திரத்துக்குச் செல்லவில்லை எனக் குறிப்பிட்ட வைகோ, முதலமைச்சர் விஜய் நேர்மையான ஆட்சியை நடத்தி வருவதாகவும், ஊழல்வாதிகள் யாரும் முதலமைச்சரை நெருங்க முடியாது என்றும் கருத்து தெரிவித்தார்.