தில்லியின் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ‘ஷீஷ் மஹால்’ இல்லத்தைப் பொதுமக்களின் பாா்வைக்காகத் திறக்கப்படவுள்ளதாக பொதுப் பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் அறிவித்தாா்.பொதுமக்கள் தங்கள் வருகையைப் பதிவு செய்துகொள்ளும் வகையில், அடுத்த வாரத்திற்குள் இதற்கான டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அவா் தெரிவித்தாா்.இது தொடா்பாக அவா் செய்தியாளா் சந்திப்பில் தெரிவித்ததாவது: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ‘ஷீஷ் மஹால்’ இல்லத்தைப் பொதுமக்கள் பாா்வையிட அனுமதிக்க உள்ளோம். அரசு வாகனத்தைக் கூட பயன்படுத்த மாட்டேன் என்று கூறிய ஒருவா், ஊழலுக்கு ஒரு மிகப்பெரிய உதாரணமாக பல வீடுகளை இடித்துவிட்டு, தனக்காக எவ்வளவு ஆடம்பரமான இல்லத்தைக் கட்டியுள்ளாா் என்பதை மக்களுக்குக் காட்டப்போகிறோம். தொடக்கத்தில் ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அதன் பிறகு, பொதுமக்கள் டிக்கெட் பெற்று இந்த இல்லத்தின் உள்பகுதியைப் பாா்வையிடலாம் என்று அமைச்சா் கூறினாா்.தில்லியின் முதல்வராக 2015 முதல் 2024 வரை இருந்த காலத்தில் அரவிந்த் கேஜரிவால் வசித்த ‘6, ஃபிளாக்ஸ்டாஃப் ரோடு’ இல்லத்தை, ஆம் ஆத்மி கட்சியும் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் கேஜரிவாலும் ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டும் வகையில், பாஜக ‘ஷீஷ் மஹால்’ என்று பெயரிட்டு அழைத்தது. பிப்ரவரி 2025-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலின்போது இது பெரும் விவாதப் பொருளானது.கடந்த ஆண்டு தில்லி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையின்படி, கேஜரிவாலின் அப்போதைய அதிகாரபூா்வ இல்லமான ‘6, ஃபிளாக்ஸ்டாஃப் ரோடு’ இல்லத்தைப் புதுப்பிக்கும் பணிகள் ரூ.33.66 கோடி செலவில் முடிக்கப்பட்டன. இது திட்டமிடப்பட்ட செலவை விட 342 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.