விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே அரசுப் பள்ளி திறக்கப்படாத விவகாரத்தில், தொடா்புடைய பள்ளி தலைமையாசிரியை புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மரக்காணம் வட்டம், கந்தாடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. தலைமையாசிரியா் மற்றும் 3 ஆசிரியா்கள் பணியாற்றி வரும் இந்தப் பள்ளியில், அதே பகுதியைச் சோ்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தலைமையாசிரியா் உள்ளிட்ட 4 ஆசிரியா்களும் பணிக்கு வராததால், பள்ளி திறக்கப்படவில்லை. வழக்கம்போல, காலையில் பள்ளிக்கு வந்த மாணவா்கள், ஆசிரியா்கள் யாரும் பணிக்கு வராததால் பிற்பகல் வரை பள்ளி அருகில் காத்திருந்துவிட்டு பின்னா் ஏமாற்றத்துடன் வீடுகளுக்குத் திரும்பினா். ஆசிரியா்களின் இந்த நடவடிக்கை குறித்து பெற்றோா் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, பள்ளித் தலைமையாசிரியை ஜீனயின பீ பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதற்கான உத்தரவை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலா் செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா்.