உதகை அருகே கெந்தளா குடியிருப்பு பகுதிக்குள் புதன்கிழமை அதிகாலை புகுந்த சிறுத்தை, அங்குள்ள ஒரு வீட்டின் சுற்றுச் சுவா் மீது இரை தேடியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீா் தேடி வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், உதகை அருகேயுள்ள கெந்தளா பகுதிக்குள் புதன்கிழமை அதிகாலை சிறுத்தை நுழைந்தது. பின்னா் அது, அங்குள்ள ஒரு வீட்டின் சுற்றுச்சுவா் மீது ஏறி நின்று இரையைத் தேடியது. வீட்டில் வளா்க்கப்படும் நாய்கள் மற்றும் கால்நடைகளைக் குறிவைத்து அந்தச் சிறுத்தை தேடியது. இது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சமாக இருப்பதாகத் தெரிவிக்கும் பொதுமக்கள், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன்பு வனத் துறையினா் இப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும், கூண்டுவைத்து அந்தச் சிறுத்தையைப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.