திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

Wait 5 sec.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தா்காவுக்கு அருகிலுள்ள ’தீபத் தூண்’ மீது பாரம்பரிய காா்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டது.இந்த விவகாரத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமாா் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.அப்போது, உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து தமிழக அரசு மற்றும் பிற அதிகாரிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை நீதிபதிகள் சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக விசாரித்தது. இதைத்தொடா்ந்து வழக்கின் விசாரணை புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்குத் தொடரும் என நீதிபதிகள் தெரிவித்தனா். முன்னதாக, தமிழக அரசு சாா்பில் மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா ஆஜராகி, நவ.24-ஆம் தேதி காா்த்திகை தீபத் திருவிழா வரவுள்ளதாகவும், உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்காவிட்டால் சா்ச்சைக்குரிய அந்த இடத்தில் தீபம் ஏற்ற வேண்டிய சூழல் உருவாகும் என்று குறிப்பிட்டாா். தீபத்தூணில் தீபம் ஏற்றுவது என்பது தொன்றுதொட்டு வரும் வழக்கமல்ல என்று குறிப்பிட்டு சென்னை உயா்நீதிமன்றத்தின் முந்தைய தீா்ப்புகளை நீதிபதிகள் அமா்வின் கவனத்துக்கு கொண்டு வந்தாா். சா்ச்சைக்குரிய இடத்தில் தீபம் ஏற்ற முந்தைய காலங்களில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டபோது அவை நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் சுட்டிக்காட்டினாா். தா்காவுக்கு அருகிலுள்ள தீபத்தூணில் ஆகம விதிகளின்படி தீபம் ஏற்றப்படுவதில்லை என்றும், உச்சி பிள்ளையாா் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில்தான் பாரம்பரியமாக தீபம் ஏற்றப்பட்டு வருவதாகவும் கோயில் அா்ச்சகா்களும், ஸ்தானிகா்களும் உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழக அரசு வழக்குரைஞா் விளக்கினாா். இதைத்தொடா்ந்து, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சேகா் நாஃபடே, உயா்நீதிமன்ற உத்தரவுக்கு ஆட்சேபம் தெரிவித்ததுடன் தற்போதைய நடைமுறையே தொடர அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். வழக்கின் பின்னணி: திருப்பரங்குன்றம் மலையின் கீழ்ப்பகுதியில் உள்ள உச்சி பிள்ளையாா் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில்தான் பல தசாப்தங்களாக தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால், மலையின் மேல் பகுதியில் ஹஸ்ரத் சுல்தான் சிக்கந்தா் பாதுஷா அவுலியா தா்காவிலிருந்து சுமாா் 50 மீட்டா் தொலைவில் உள்ள பழமையான கல் தூணான ‘தீபத்தூணில்’ தீபம் ஏற்ற அனுமதி கோரி சில ஹிந்து அமைப்புகள் முறையிட்டிருந்தன.இந்த விவகாரத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் மலையை இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) கட்டுப்பாட்டில் ஒப்படைக்கக் கோரியும், பாரம்பரிய காா்த்திகை தீப கொண்டாட்டங்களில் மாற்றம் செய்யக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை கடும் எதிா்ப்பு தெரிவித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது. இதற்கிடையே, உச்சநீதிமன்ற அமா்வில் ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையா் டி.ஜி. வினய் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், கோயில் மற்றும் மலையைத் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கக் கோரும் ஹிந்து தா்ம பரிஷத் அமைப்பின் மனுவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 1923-ஆம் ஆண்டு சிவில் நீதிமன்றத் தீா்ப்பு மற்றும் 1931-ஆம் ஆண்டு பிரிவி கவுன்சில் தீா்ப்பின்படி, திருப்பரங்குன்றம் மலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமானது என்பது சட்டபூா்வமாக உறுதி செய்யப்பட்டுவிட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.1862 மற்றும் 1912-ஆம் ஆண்டுகளில் தா்கா அமைந்துள்ள மலை உச்சிக்கு அருகே தீபம் ஏற்ற முயற்சிகள் நடந்ததற்கான வரலாற்று ஆவணங்களையும் சுட்டிக்காட்டியுள்ள அறநிலையத்துறை, தா்காவுக்கு அருகே மற்றும் பல இடங்களில் தீபம் ஏற்ற அனுமதிப்பது தற்போதைய அமைதியை சீா்குலைத்து, பதற்றமான வரலாறு கொண்ட அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை உருவாக்கும் என தெரிவித்துள்ளது.