ஐபிஎல் போட்டியின் அறிமுக சீசனிலேயே (2008) தோனியை ஏலத்தில் எடுத்த சென்னை, அந்த சீசனிலேயே அவரை கேப்டன் ஆக்கியது. அப்போது முதல் அவரே சென்னை அணியின் முகமாகத் திகழ்ந்தார். சென்னை அணி 2010, 2011, 2018, 2021, 2023 ஆகிய 5 ஆண்டுகள் சாம்பியன் கோப்பை வெல்ல தோனி வழிவகுத்தார். போட்டியின் வரலாற்றில் ஒரு அணிக்கு அதிகமுறை கோப்பை வென்றுதந்த கேப்டன் என்ற சாதனையை, மும்பை இண்டியன்ஸின் ரோஹித் சர்மாவுடன் அவர் பகிர்ந்துகொண்டார். சிஎஸ்கே 2010, 2011-ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து சாம்பியன் ஆனபோது, ஐபிஎல் போட்டியில் சாம்பியன் கோப்பையைத் தக்கவைத்த முதல் கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றார். சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் தோனி தலைமையில் சென்னை 2010, 2014 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்றது. தோனி தலைமையில் சென்னை, 10 முறை இறுதி ஆட்டத்துக்கும், 12 முறை பிளேஆஃப் கட்டத்துக்கும் சென்று, போட்டியிலேயே நிலையான அணியாக விளையாடி வந்தது. சென்னை அணி 3-ஆவது பட்டம் வென்ற 2018 சீசன், தோனிக்கு சிறந்த ஒன்றாக அமைந்தது. 455 ரன்கள் சேர்த்த தோனி, 75.83-ஐ சராசரியாகவும், 150.66-ஐ ஸ்டிரைக் ரேட்டாகவும் கொண்டிருந்தார். 2022 சீசனில் சிஎஸ்கே கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட, அந்த சீசன் அணிக்கு மோசமான தொடக்கமாக அமைந்ததை அடுத்து, மீண்டும் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றார். தோனி தலைமையில் கடைசியாக சிஎஸ்கே, 2023-இல் குஜராத் டைட்டன்ûஸ வீழ்த்தி சாம்பியன் ஆனது. 2023-இல், ஐபிஎல் போட்டியில் 250 ஆட்டங்களில் விளையாடிய முதல் வீரர் ஆனார் தோனி. 2024 சீசனில் தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலக, ருதுராஜ் கெய்க்வாட் அந்தப் பொறுப்பை ஏற்றார். முழங்கால் காயத்துக்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட தோனி, 2024 சீசனில் டெத் ஓவர்களில் மட்டும் களம் கண்டார். 73 பந்துகளில் 161 ரன்கள் சேர்த்த அவர், தனது ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக 220.54-ஐ ஸ்டிரைக் ரேட்டாக கொண்டிருந்தார். 14 பவுண்டரிகள், 13 சிக்ஸர்கள் அடித்த தோனி, ஐபிஎல் வரலாற்றில் 250 சிக்ஸர்களை கடந்தார். 2025-இல் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விளையாட முடியாமல் போக, தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றார். ஆனால், போட்டியின் வரலாற்றிலேயே முதல்முறையாக, அந்த சீசனில் சென்னை கடைசி இடம் பெற்றது. கால் மற்றும் கை விரல் காயம் காரணமாக, 2026 சீசன் முழுவதுமாக ஒரு ஆட்டத்தில் கூட தோனி களம் காணவில்லை. அவர் ஒரு ஆட்டத்தில் கூட விளையாடாத முதல் ஐபிஎல் சீசன் அது. அப்போதே, சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய கடைசி ஆட்டத்தின் முடிவில் மைதானத்தை வலம் வந்து ரசிகர்களின் அன்பை ஏற்றுக் கொண்டார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை (201) சாய்த்த விக்கெட் கீப்பர் என்ற பெருமை தோனி வசம் உள்ளது. அவர், 154 கேட்ச்கள் பிடித்ததுடன், 47 ஸ்டம்பிங்குகள் செய்துள்ளார். ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வுபெற்ற தோனி, சிஎஸ்கே அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.