எதிர்கட்சியினர் தொடர்பான வழக்கு எனில் வேகம் காட்டும் காவல்துறை, போலி புத்தக முறைகேட்டில் வழக்குப் பதியாதது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக, அரசு அதிகாரிகள் மீது ஏன் இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை? என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.திருவள்ளூரில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தவெக தெற்கு மாவட்ட செயலாளரும், பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ-வுமான பிரகாசம் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அக்கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த ஒருவரிடம் பிரகாசம் தவறான முறையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில், திருவள்ளுவர் நகர் போலீசார் பிரகாசம் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து பெரியார் அறிவுலகம் தொடர்பான வழக்கை குறிப்பிட்டு, காவல்துறை தரப்பு வழக்குரைஞரிடம், அரசு அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகளின் உதவியின்றி எப்படி அரசியல்வாதிகளால் லஞ்சம் பெற முடியும்? பெயர் தெரியாத பதிப்பகங்களுக்கு புத்தகங்களை கொள்முதல் செய்ய ஆணை பிறப்பித்தது யார்? இந்த விவகாரத்தில் தொடர்புடைய அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை? ஆனால் எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் எனில், காவல்துறை வேகமாக செயல்படுகிறது என கேள்வி எழுப்பினார். அதற்கு காவல்துறை தரப்பில், புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருவதாவும், வரும் திங்கள்கிழமை இதுகுறித்து விரிவான பதில்மனு தாக்கல் செய்வதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.