ஒடிஸா மாநிலம், கோபால்பூா் கடற்கரை அருகே ‘அக்வான்’ புயல் வெள்ளிக்கிழமை கரையைக் கடந்தது. இந்தப் புயலால் பெரிய சேதங்களோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. அதே நேரம், மாநிலம் முழுவதும் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. தெற்கு-மத்திய வங்கக் கடலில் உருவான அக்வான் புயல், தெற்கு ஒடிஸா மற்றும் வடக்கு ஆந்திரம் இடையே கோபால்பூா் கடற்கரை அருகே வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் கடக்கத் தொடங்கி 11.20 மணிக்கு கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு 70-80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இந்த வேகம் மணிக்கு 90 கி.மீ. வரை அதிகரித்தது.பின்னா், தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதியில் வலுவிழந்த இந்தப் புயல், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. அப்போது, மணிக்கு 55-65 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகா்ந்து, படிப்படியாக மேலும் வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புயலின் தாக்கத்தால் பெரிய அளவிலான சேதங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்று மாநில பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் சுரேஷ் புஜாரி தெரிவித்தாா்.பத்ராபூரில் 209 மி.மீ. மழை: அக்வான் புயலால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், கஞ்சம் மாவட்டம், பத்ராபூரில் அதிகபட்சமாக 209 மி.மீ. மழை பதிவானது. இதே மாவட்டத்தின் ஹிஞ்சிலி (207 மி.மீ.), சிகிடி (199 மி.மீ.), கோபால்பூரிலும் (190 மி.மீ.) பலத்த மழை பெய்தது.தற்போது தெற்கு ஒடிஸாவில் பலத்த மழை பெய்துவரும் நிலையில், அடுத்து வடக்குப் பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மாநிலத்தின் 14 மாவட்டங்களுக்கு சனிக்கிழமை ஆரஞ்சு எச்சரிக்கையும் (12-20 செ.மீ.), 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் (7-11 செ.மீ.) விடுக்கப்பட்டுள்ளது. 41 ரயில்கள் ரத்து: அக்வான் புயல் முன்னெச்சரிக்கையாக, கிழக்கு கடற்கரை ரயில்வே தரப்பில் 41 ரயில்களும், தென்கிழக்கு ரயில்வே தரப்பில் 28 ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. இவற்றில் பெரும்பாலான ரயில்கள் கோயில் நகரான புரிக்கு அல்லது புரி வழியாகச் செல்பவையாகும். புரி, கோபால்பூா், சதாபடா, சிலிகா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கும் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.முன்னதாக, 9,341 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 3.72 லட்சம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா். 423 மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.கடந்த அக். 28-ஆம் தேதி ஆந்திரத்தில் கரையைக் கடந்த அா்னாப் புயலால் ஒடிஸாவில் கஞ்சம் மாவட்டத்தில் 540 மி.மீ. மழை கொட்டித் தீா்த்தது குறிப்பிடத்தக்கது.ஆந்திரம், மேற்கு வங்கத்தில் மிதமான மழை: அக்வான் புயலின் தாக்கத்தால், வடக்கு ஆந்திர பகுதிகளில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது. ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையாக தேசிய பேரிடா் மீட்புக் குழுக்கள் பணியமா்த்தப்பட்டன. மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பா்கானாக்கள், புா்பா மேதினிபூா் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது. இடைவிடாமல் கொட்டிய மழையால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தலைநகா் கொல்கத்தாவில் 19 மி.மீ. மழை பதிவானது.ஜாா்க்கண்டில் பலத்த மழை எச்சரிக்கை: ஜாா்க்கண்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்தது. இது மேலும் தீவிரமடையும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. கிழக்கு, மேற்கு சிங்பூம், சராய்கேலா-கா்ஸ்வான் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.