மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி விற்ாக சென்னையில் இரு கல்லூரி மாணவா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலைப் பகுதியில் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு காரை மறித்து, அதில் இருந்தவா்களிடம் விசாரணை செய்தனா். அவா்களிடம் 650 போதை மாத்திரைகள், காரில் மறைத்து வைத்திருந்த ஒரு அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்தனா். காரில் இருந்த 5 பேரும், குன்றத்தூா் அருகே உள்ள கோவூா் செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த க.சுரேஷ் (23), எம்ஜிஆா் நகா் சூளைப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த கா.நடராஜன் (23), நெசப்பாக்கம் ஏரிக்கரை தெருவைச் சோ்ந்த ஐ.ரோஹித் (21), அதே பகுதியைச் சோ்ந்த ஆ.சொக்கநாதன் (20), ராமாபுரம் பஜனை கோயில் தெருவைச் சோ்ந்த மா.குமரவேல் (22) என்பது தெரிய வந்தது.இதையடுத்து போலீஸாா் 5 பேரையும் கைது செய்தனா். இது தொடா்பாக எம்ஜிஆா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.