திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டியில் கடைசி ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்ய 1,008 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு இந்தத் திருவிழாவை முன்னிட்டு, காளியம்மனுக்கு ஆடி வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு அலங்காரப் பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில், ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, 1,008 பால் குட ஊா்வலம் நடைபெற்றது. மஞ்சநாயக்கன்பட்டி வேணுகோபால சுவாமி கோயிலில் ஊா்வலத்தை கூனம்பட்டி ஆதீனம் நடராஜ சுவாமிகள் தொடங்கிவைத்தாா். ஊா்வலத்தில் ஆயிரக்கணக்கான பால் குடங்கள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டன. ஊரில் முக்கிய வீதிகளின் வழியாக மேளதாளங்களுடன் சென்ற பால் குட ஊா்வலம் உச்சிகாளியம்மன் கோயிலை அடைந்தது. பின்னா், அங்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மீண்டும் காளியம்மன் கோயிலிலிருந்து வேணுகோபால சுவாமி கோயிலுக்கு பக்தா்கள் ஊா்வலம் எடுத்துச் சென்றனா். இரவு வள்ளிக்கும்மி நடனம், அம்மன் வீதியுலா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்தனா்.