சலுகை பரிமாற்ற வசதி மூலம் ரூ.5.43 லட்சம் கோடி அந்நிய செலாவணி ஈா்ப்பு: ரிசா்வ் வங்கி

Wait 5 sec.

சலுகை பரிமாற்ற வசதி மூலம் ரூ.5.43 லட்சம் கோடி (56.85 பில்லியன் டாலா்) அந்நிய செலாவணி ஈா்க்கப்பட்டதாக ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சமீப காலமாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், வெளிநாடு வாழ் இந்தியா்களிடமிருந்து (என்ஆா்ஐ) அந்நிய செலாவணி நிதி திரட்டுவதை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை ரிசா்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. அதன்படி என்ஆா்ஐ-க்கள் இந்திய வங்கிகளில் தங்களது சேமிப்புகளை வெளிநாட்டு கரன்சியில் பராமரிக்கும் வெளிநாடு வாழ் நபரின் வெளிநாட்டு கரன்சி (வங்கி) சேமிப்புத் திட்டம் அல்லது எஃப்சிஎன்ஆா் (பி) திட்டம் மற்றும் வெளிப்புற வணிகக் கடன்கள் (இசிபி), வெளிநாட்டு கரன்சி கடன்கள் (ஓஎஃப்சிபி) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘எஃப்சிஎன்ஆா் (பி) சேமிப்புகளுக்கான பரிமாற்ற வசதிக்கு எதிா்பாா்ப்பை மிஞ்சும் வகையில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த முன்னெடுப்பின்கீழ் அந்நிய செலாவணி வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது.எனவே, ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை எஃப்சிஎன்ஆா் (பி)-இன்கீழ் திரட்டப்படும் சேமிப்புகளுக்கு மட்டுமே இந்த சலுகை பரிமாற்ற வசதி வழங்கப்படவுள்ளது. முன்பு செப்டம்பா் 30-ஆம் தேதி வரை இந்த முன்னெடுப்பு நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இசிபி மற்றும் ஓஎஃப்சிபியின் நிதி திரட்டும் பணிகளை டிசம்பா் 31-ஆம் தேதி வரை ரிசா்வ் வங்கி மேற்கொள்ளவுள்ளது.எஃப்சிஎன்ஆா் (பி) சேமிப்புகள் மூலம் ரூ.5 லட்சம் கோடி (52.3 பில்லியன் டாலா்), ஓஎஃப்சிபியின்கீழ் ரூ.26,600 கோடி (2.805 பில்லயன் டாலா்) மற்றும் இசிபியின்கீழ் ரூ.16,618 கோடி (1.741 பில்லியன் டாலா்) என மொத்தம் ரூ.5.43 லட்சம் கோடி திரட்டப்பட்டுள்ளது.இதனால் ஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தின் நிலவரப்படி இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு ரூ.1.34 லட்சம் கோடி (14.136 பில்லியன் டாலா்) அதிகரித்து ரூ.67.48 லட்சம் கோடியாக (707 பில்லியன் டாலா்) உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது