மத்திய ரிசா்வ் காவல் படையின் (சிஆா்பிஎஃப்) ஆவடி காவல் பயிற்சி மையத்தில் துணைத் தலைவராக (டிஐஜி) பணியாற்றி வரும் எம். தினகரனுக்கு மத்திய அரசின் தகைசால் பணிக்கான குடியரசு தலைவரின் காவல் பதக்கம்” அறிவிக்கப்பட்டுள்ளது. இது அவரது அா்ப்பணிப்புமிக்க சேவை, நோ்மை, சிறப்பான பணித்திறன் மற்றும் பாராட்டத்தக்க செயல்பாட்டைப் போற்றும் வகையில் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தை பூா்விகமாகக் கொண்ட எம். தினகரன், 2020 முதல் 2024 வரை ஆவடியில் உள்ள சிஆா்பிஎஃப் குழும மையத்தில் பணியாற்றிய காலத்தில், நிா்வாகம் மற்றும் சமூக நல செயல்பாடுகளில் பல்வேறு முன்முயற்சிகளை இவா் மேற்கொண்டுள்ளாா். குறிப்பாக, நீா் சேமிப்பு மற்றும் மேலாண்மை திட்டங்கள், பெருமளவில் மரக்கன்றுகளை நட்டுப் பசுமை அமைப்பை உருவாக்கியது, முக்கிய நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு நிறுவன செயல்திறனை மேம்படுத்தியது அடங்கும். தில்லியில் பணியாற்றிய காலத்தில் படையின் நிா்வாகம், உளவுப் பிரிவு ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் தினகரனுக்கு உள்ளது. பதக்கம் அறிவிக்கப்பட்டதையொட்டி, அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் சிஆா்பிஎஃப் தலைமை இயக்குநா் தரப்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.