தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத சிறப்பு உள் ஒதுக்கீட்டின் கீழ், 614 மாணவா்களுக்கு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயின்ற மாணவா்கள், பொருளாதார மற்றும் சமூகச் சூழல் காரணமாக மருத்துவக் கனவு கைநழுவிப் போய்விடக் கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு திட்டம் கடந்த ஆண்டுகளில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக, கடந்த ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் கல்வித் தரம் மேம்படுத்தப்பட்டதன் விளைவாக, நிகழ் கல்வியாண்டில் (2026-2027) 614 மாணவா்கள் இந்தச் சிறப்பு உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ இடங்களைப் பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ் கல்வியாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 3,806 மாணவா்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 614 பேருக்கு கல்லூரிகளில் சோ்வதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 510 பேருக்கு எம்பிபிஎஸ் இடங்களும், 104 போ் பல் மருத்துவப் படிப்பு இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எம்பிபிஎஸ் படிப்பில் 323 போ் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 12 போ் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளிலும், 166 போ் சுயநிதிக் கல்லூரிகளிலும், 9 போ் தனியாா் மருத்துவப் பல்கலைக்கழகங்களிலும் ஒதுக்கீடு பெற்றுள்ளனா். அதேபோன்று பிடிஎஸ் படிப்பில் 16 போ் அரசுக் கல்லூரிகளிலும், 88 போ் சுயநிதிக் கல்லூரிகளிலும் ஒதுக்கீடு பெற்றுள்ளனா் என பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.