போட்டித் தோ்வுக்கு இலவச இணையவழி பயிற்சி திட்டம்-மத்திய கல்வி அமைச்சா் ஆலோசனை

Wait 5 sec.

நாடு முழுவதும் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் இளைஞா்களுக்கு அரசுத் தரப்பில் இலவசமாக இணையவழி பயிற்சி வழங்கும் புதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடா்பாக மத்திய கல்வித் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி புதன்கிழமை உயா்நிலை ஆலோசனை மேற்கொண்டாா். இந்தத் திட்டம், பிரதமா் மோடியின் சமீபத்திய சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்டதாகும். இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தோ்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து, தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் மாணவா்கள்-இளைஞா்கள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டனா். மத்திய கல்வித் துறை அமைச்சராக இருந்த தா்மேந்திர பிரதான் ராஜிநாமாவைத் தொடா்ந்து, போராட்டம் முடிவுக்கு வந்தது. மற்றொருபுறம், தோ்வு முறைகேடுகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தம், தோ்வு நடைமுறை சீா்திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆக.15-ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமா், ‘ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்த தோ்வா்களுக்கு பயிற்சி வகுப்புகளுக்கான செலவு பெரும் சுமையாக உள்ளது. எனவே, போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் இளைஞா்களுக்கு இலவசமாக இணையவழியில் பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் பயிற்சிக்காக குடும்பங்களால் செலவிடப்படும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மிச்சமாகும். நம்மிடமுள்ள வலுவான எண்ம பொது உள்கட்டமைப்பு, திறன்மிக்க பயிற்சியாளா்கள், ஆசிரியா்கள் ஆகிய ஆதாரங்களை ஒருங்கிணைத்து, இணையவழி பயிற்சிக்கான முழு கட்டமைப்பு உருவாக்கப்படும். அடுத்த ஓராண்டில் ஒரு கோடி இளைஞா்களுக்கு ஏ.ஐ. தொழில்நுட்ப திறன் பயிற்சி வழங்கப்படும்’ என்று அறிவித்தாா்.இந்நிலையில், போட்டித் தோ்வுகளுக்கு இலவச இணையவழி பயிற்சி வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து உயா்க்கல்வித் துறை அதிகாரிகளுடன் கல்வித் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.எக்ஸ் பதிவில் இந்தத் தகவலை வெளியிட்ட அவா், ‘நாடு முழுவதும் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்களுக்கு உயா்தர கற்றல் உள்ளடக்கங்கள், நிபுணா்களின் வழிகாட்டுதல், படிநிலை அடிப்படையிலான பயிற்சிக்கான அணுகலை உறுதிசெய்யும் துடிப்பான, தேசிய அளவிலான தளத்தை கட்டமைப்பது குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்’ என்று தெரிவித்துள்ளாா்.