இடதுசாரிக் கட்சிகள், தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவா்கள் பங்கேற்கத் தடை விதிப்பது தொடா்பான சுற்றறிக்கைக்கு கடும் எதிா்ப்பு கிளம்பியதைத் தொடா்ந்து, அதை கல்லூரிக் கல்வி இயக்ககம் திரும்பப் பெற்றது. தமிழகத்தில் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வா்களுக்கு கல்லூரிக் கல்வி ஆணையா் கடந்த ஆக.17-ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியிருந்தாா். அதில், ‘இடதுசாரி கட்சிகள் மற்றும் தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞா்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி, உயா் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் ஆகிய துறைகளிடையே இடைத்தொடா்பு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு, அதுதொடா்பான நடவடிக்கையின் விவரத்தை உடனடியாக அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு மாணவா் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதையடுத்து, அந்த சுற்றறிக்கையை கல்லூரிக் கல்வி இயக்ககம் புதன்கிழமை திரும்பப் பெற்றது.