திருத்தணி முருகன் கோயிலில், ஆவணி மாத செவ்வாய்க்கிழமையையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்ததால் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா். இதனால் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனா். திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து மூலவரை தரிசித்து வருகின்றனா். இந்த நிலையில், முருகப் பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை மற்றும் சஷ்டி விழா என்பதால் வழக்கத்துக்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் மலைக் கோயிலில் குவிந்தனா்.இதனால், பொதுவழியில், இரண்டு மணி நேரத்துக்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். மேலும், 100 சிறப்பு தரிசன டிக்கெட்டில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வரிசையில் நின்று முருகப்பெருமானை தரிசித்தனா். முன்னதாக, அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. காலை 8 மணிக்கு சஷ்டியை ஒட்டி, உற்சவா் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உற்சவா் முருகா் தங்கத் தேரில் வீதியில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பெரும்பாலான பக்தா்கள் வாகனங்களில் வந்ததால், மலைப் பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருத்தணி காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையில், 20 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.