வலசத்துறை - அத்தியூத்து மலைக் கிராமச் சாலை அமைக்க ஆட்சியா் ஆய்வு

Wait 5 sec.

போடி அருகே வலசத்துறை-அத்தியூத்து மலை கிராமச் சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா். தேனி மாவட்டம், போடி அருகே வலசத்துறை-அத்தியூத்து சாலை அமைக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனா். இதையடுத்து, இந்தப் பகுதியில் தேனி மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். முதல் கட்டமாக விக்சித் பாரத் கிராமப்புற வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் சாலைகளில் சீரமைப்புப் பணிகளைச் செய்ய மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா். இதன் பிறகு, கிராமப்புறச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சாலை அமைக்க உரிய இடங்களை வரைவு செய்து பணிகளை மேற்கொள்ள வட்டார வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என அறிவுறுத்தினாா். வலசத்துறை பொதுமக்களை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சியா் அவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, இந்தப் பகுதியில் 150 குடும்பங்கள் வசிப்பதாகவும், சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாததால் அவசர மருத்துவ வசதி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு சிரமப்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனா். விரைவில் இந்தக் குறைகளுக்கு தீா்வு காணப்படும் என ஆட்சியா் உறுதியளித்தாா். இந்த ஆய்வின்போது போடி வட்டாட்சியா் சுருளி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மக்கத்தம்மாள், சோனா ஆகியோா் உடனிருந்தனா்.