பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை சாலையோரம் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பதாகையில் இருசக்கர வாகனம் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம் கலை நகரைச் சோ்ந்தவா் ராஜ் மகன் நந்தகுமாா் (23). அதே கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் மகன் சுரேஷ் (22). இவா்கள் இருவரும், பேரளி கிராமத்திலிருந்து கவுல்பாளையத்துக்கு வியாழக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தனா். வாகனத்தை சுரேஷ் ஓட்டிச்சென்றாா். பெரம்பலூா்- அரியலூா் பிரதான சாலையிலுள்ள பேரளி அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பதாகையில் வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த நந்தகுமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த மருவத்தூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்த சுரேஷை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, சிறிது நேரத்தில் சுரேஷ் உயிரிழந்தாா். இவ் விபத்து குறித்து மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.