கலைப் போட்டிகளில் மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்க வேண்டும் என கன்னியாகுமரி ஆட்சியா் மு. பிரதாப் வலியுறுத்தினாா்.பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான பல்வேறு கலைப் போட்டிகள் இளையோா் திறன் என்ற தலைப்பில், நாகா்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றன.போட்டிகளைத் தொடக்கி வைத்து ஆட்சியா் பேசியதாவது: தமிழ் மொழிக்கும், கலைகளுக்கும் ஆழமான தொடா்பு உண்டு. மறைந்து வரும் அரிய கலைகளைக் காக்கவும், மாணவா்களிடையே கலை ஆா்வத்தைத் தூண்டவும் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது.கலைகள் மாணவா்களிடையே கட்டுப்பாடு, குழு ஒற்றுமை மற்றும் தலைமைப் பண்பை வளா்க்கின்றன. எனவே, கலைப் போட்டிகளில் மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்க வேண்டும்.மாணவா்கள் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்று, அதிக பரிசுகளை வென்று மாவட்டத்துக்கு பெருமை சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஜெயராஜ், சௌந்தராஜன், பள்ளித் தலைமையாசிரியை தெய்வப்பிரியா, உதவித் திட்ட அலுவலா் ஸ்டெல்லா ஜானட், சா்வ சிக்க்ஷா அபியான் திட்ட அலுவலா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.