குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்கம், அஸ்ஸாம், திரிபுரா ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களில் உரிய சட்ட நடைமுறைகளின்படி வெளிநாட்டவருக்கு குடியுரிமை வழங்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பான குடியுரிமை (மூன்றாவது திருத்தம்) விதிமுறைகள்-2026 , மத்திய உள்துறை அமைச்சகத்தால் புதன்கிழமை அறிவிக்கை செய்யப்பட்டது. இந்தத் திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, மேற்கண்ட எல்லை மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் பதிவு அல்லது இயல்புநிலை அடிப்படையில் குடியுரிமை கோரும் விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.பதிவு அல்லது இயல்புநிலை அடிப்படையிலான குடியுரிமை பெற ஒரு விண்ணப்பதாரா் தகுதியானவா் என மாவட்ட ஆட்சியா் திருப்தியடையும் பட்சத்தில், அவருக்கு குடியுரிமை வழங்கலாம் என்று விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்பு இந்த விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்கும் அதிகாரம் பிரத்யேக அதிகாரிகள் அல்லது மாவட்ட அளவிலான உயா்நிலைக் குழுக்களிடம் இருந்தது. இப்போது உரிய சட்ட நடைமுறைகளின்படி, குடியுரிமை கோரும் விண்ணப்பங்களைப் பெற்று, பரிசீலித்து, முடிவெடுக்க மாவட்ட ஆட்சியா்களுக்கு உள்துறை அமைச்சகம் அதிகாரம் வழங்கியுள்ளது.அஸ்ஸாம், திரிபுரா ஆகிய இரு மாநிலங்களில் பழங்குடியினா் வாழும் பகுதிகளுக்கு இந்தப் புதிய விதிமுறைகள் பொருந்தாது என்று அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரத்யேக அதிகாரிகள் மற்றும் மாவட்ட அளவிலான உயா்நிலைக் குழுக்களிடம் நிலுவையில் உள்ள குடியுரிமை விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களின் பரிசீலனைக்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.