பழங்காலத்தில் கோட்டைகள் அல்லது பெரிய மதில் சுவர்களில் அவசர தேவைகளுக்காகவும், காவலர்கள் கண்காணிப்பதற்காகவும் வைக்கப்படும் சிறிய கதவு/துவாரத்துக்கு "திட்டி வாசல்' என்று பெயர். ஸ்ரீரங்கம் கோயிலின் தெற்குப் பகுதி பாதுகாப்பு எல்லையையொட்டி அமைந்ததால், அங்கு கோயில் கொண்ட அஞ்சனை மைந்தனுக்கு "திட்டி ஆஞ்சநேயர்' என்ற பெயர் நிலைத்தது.விஜயநகரப் பேரரசு காலத்தின்போது, அரச குரு ஸ்ரீவியாஸராஜ தீர்த்தர் இந்தச் சிலையை பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது. ராகு, கேது மற்றும் சனி தோஷங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சனிக்கிழமைகளில் இங்கு வந்து வெற்றிலை மாலை மற்றும் எலுமிச்சை மாலை சாற்றி வழிபடுகிறார்கள்.ரங்கநாதர் கோயில் வீதி உலாக்களின்போது, இப்பகுதி வழியாகச் செல்லும் முக்கிய உற்சவர்கள் திட்டி ஆஞ்சநேயரின் வாசலில் நின்று சிறப்பு உபய மரியாதைகளைப் பெற்றுக் கொள்வது இன்றும் தொடர்கிறது.ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் வடம்போக்கி சந்தில் அமைந்துள்ள இந்தக் கோயில் விமான ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷணம் ஆகஸ்ட் 19 (புதன்கிழமை) காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது. - ஆர்.வேல்முருகன்