சோழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களுள் ஒன்று விழுப்புரம் மாவட்டம், எசாலம் என்ற கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி சமேத ராமநாதீஸ்வரர் கோயில். 1012-ஆம் ஆண்டில் இல் ராஜராஜ சோழனின் குமாரன் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் தொடங்கப்பட்டு, 1027}ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட கோயில். ராஜேந்திர சோழனின் குல குருவான சர்வ சிவ பண்டிதரால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கருவறை, அர்த்த மண்டபம். அம்மன் சந்நிதி, முக மண்டபம், பரிவார தெய்வங்களுடன் ஒரு திருச்சுற்று கொண்ட கோயில். இறைவனுக்கு முன்பு நந்தியம்பெருமானும், அதனையடுத்து பலிபீடமும் அமைந்துள்ளன. பலிபீடத்தில் கண்டப் பகுதியில் நான்கு திசைகளிலும் உள்ள சதுரப்படையில் சங்கு ஊதும் பூதகணங்கள் காட்சி அளிக்கின்றன.மகா மண்டபத்தின் கிழக்குச் சுவரில் ஒன்பது துவாரங்களுடன்கூடிய கல் ஜன்னல் அமைந்துள்ளது. அதன் சட்டத்தில் நடனமாடும் கலைஞர்கள் இருவரையும், மத்தளம் கொட்டும் கலைஞர்கள் இருவரையும் அழகிய சிற்பமாகக் காணலாம். கருவறைக்கு முன் உள்ள அர்த்த மண்டபத்தில் நான்கு தூண்கள் உருளை வடிவத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன், சோழர் கலைப்படைப்பாய் மிளிர்கின்றன. அர்த்த மண்டப நுழைவு வாயிலில் துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன.கருவறை விமானம் முழுவதும் கற்றளியாகக் காட்சி தருகிறது. விமான அமைப்பு ஏழு பகுதிகளைக் கொண்டு எளிமையாக அமைக்கப்பட்டுள்ளது. தேவகோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், நான்முகன், துர்கை வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலே அமைந்துள்ள மகரத் தோரணம் சிற்ப வேலைப்பாடின்றிக் காணப்படுகிறது. கூரையின் மேல் நான்கு மூலைகளிலும் மூலைக்கு ஒன்றாக நான்கு நந்திகள் அழகு செய்கின்றன. அர்த்த மண்டப கூரையின் மேற்பகுதியில் இரு பூத கணங்கள் தவழ்ந்த நிலையில் அமைந்துள்ளன. மழைக்காலத்தில் கூரையில் தேங்கும் மழைநீர் இதன் வாயின் வழியே வெளியேறும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.கருவறை விமானம் ஒரு தள விமானமாக வட்ட வடிவமாக அமைந்துள்ளது. விமானத்தின் கிரீவ கோட்டத்தின் நான்கு திசைகளில் தெற்கில் வீணாதர தட்சிணாமூர்த்தியையும், மேற்கில் அமர்ந்த நிலையில் திருமாலையும், வடக்கில் நான்முகனையும், கிழக்கில் இந்திரனையும் தரிசிக்கலாம். கிரீவக் கோட்டத்தின் மேல் உள்ள நாசிக் கூடுகளில் தெற்கில் ஆடவல்லான், மேற்கில் யோக நரசிம்மர், வடக்கில் நான்முகன், கிழக்கில் உமா சத்தியமூர்த்தியைக் காணமுடிகிறது. விமானத்தின் உச்சியில் அற்புத வேலைப்பாடமைந்த மகாபத்மத்தைக் காணலாம்.சதுர வடிவக் கருவறை நடுவே ராமநாதீஸ்வரர் காட்சியளிக்கிறார். மகா மண்டபம் பதினாறு தூண்களுடன் காணப்படுகிறது. இம்மண்டபத்தின் வட திசையில் தெற்கு நோக்கி அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. சுவாமியும் அம்பாளும் கேட்டதை அருளும் பெரும் வரப்பிரசாதிகள். முதலாம் ராஜேந்திர சோழனது கற்றளியான எசாலம் ராமநாதீஸ்வரர் கோயிலில் 23}க்கும் மேற்பட்ட செப்புத்திருமேனிகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் 4 மணிகள், தூபக்கால் ஒன்று எழுத்துப்பொறிப்புகளுடன் கோயில் வளாகத்தில் புதையுண்டிருந்தன. தவிர முதலாம் ராஜேந்திர சோழனால் வெளியிடப்பெற்ற எசாலம் செப்பேடுகளும் கண்டறியப்பட்டன. ஒரு கால பூஜை மட்டும் நடைபெற்று வரும் இக்கோயிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விழுப்புரம் } திண்டிவனம் சாலையில், பேரணி என்ற ஊரிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவிலும், விழுப்புரம் } செஞ்சி சாலையில், நேமூர் என்ற ஊரிலிருந்து 10.கி.மீ. தொலைவிலும் எசாலம் அமைந்துள்ளது.- பொ.ஜெயச்சந்திரன்