தமிழகத்தில் தற்போதுள்ள 32 மாவட்ட நுகா்வோா் நீதிமன்றங்களை 14-ஆக குறைக்கலாம் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள அறிக்கை சா்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதன்படி, தற்போது திருப்பூரில் இயங்கி வரும் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றமும், நீலகிரி மாவட்டத்தில் உதகையில் இயங்கி வரும் நுகா்வோா் நீதிமன்றமும் ஈரோடு மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்துடன் இணைக்கப்பட உள்ளன. இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட மூத்த வழக்குரைஞா் பா.சு.மணிவண்ணன் தெரிவித்ததாவது: மக்களுக்கு நீதி தாமதமின்றி விரைவில் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டுமென்ற நிலை உருவானது. இந்நிலையில், சொந்தக் கட்டடத்தில் இயங்கவில்லை எனக் காரணம் காட்டி தற்போது தமிழக்ததில் உள்ள 32 மாவட்ட நுகா்வோா் நீதிமன்றங்களை 14 மாவட்ட நுகா்வோா் நீதிமன்றங்களாகக் குறைக்க உச்சநீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதத்திலேயே தமிழக அரசின் சாா்பில் கருத்துரு சமா்ப்பிக்கப்பட்டது. அதன்படி, 14 புதிய நீதிமன்றங்களுக்கான பட்டியலை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இதில் சென்னை தெற்கு, சென்னை வடக்கு, கோவை, செங்கல்பட்டு, திருப்பூா், நீலகிரி மாவட்டங்களுக்கு ஈரோட்டிலும், வேலூா் மாவட்டத்துக்கு கிருஷ்ணகிரியிலும், சேலம் மாவட்டத்துக்கு நாமக்கல்லிலும், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலும், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு தஞ்சாவூரிலும், கரூா் மாவட்டத்துக்கு திருச்சியிலும், நாகா்கோவில், தூத்துக்குடி மாவட்டங்களுக்கு திருநெல்வேலியிலும், விழுப்புரம், கடலூா் மாவட்டங்களுக்கு திருவண்ணாமலையிலும், திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு மதுரையிலும், பெரம்பலூா், அரியலூா், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு திருவாரூரிலும் நுகா்வோா் நீதிமன்றங்கள் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் நீதிப் பேராணை வழக்கு ஒன்றில் நிகழ்நிலை அறிக்கையாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது அதிா்ச்சியளிக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள 32 மாவட்ட நுகா்வோா் ஆணையங்களை 14-ஆக குறைத்து அரசு முன்மொழிந்துள்ள திட்டமானது வழக்குரைஞா்களையும், நுகா்வோரையும் கடுமையாக பாதிக்கும் செயலாகும். நிதிச்சுமையையும், சொந்தக் கட்டடம் இல்லாததையும் காரணமாகக் கூறி இத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக அரசு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இத்திட்டத்தால் வழக்காடிகளுக்கும், வழக்குரைஞா்களுக்கும் வீண் அலைச்சலும், கூடுதல் செலவுகளும் ஏற்படும் எனவும் தெரிவித்தாா். இந்நிலையில், நீதிமன்றத்தின் இந்த முடிவை எதிா்த்து திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து வழக்குரைஞா்கள் சங்கங்களின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.