குழந்தைகளுக்கான சமூக ஊடகக் கட்டுப்பாடு: மத்திய அரசின் அதிகார வரம்புக்குட்பட்டது - தில்லி உயா்நீதிமன்றம்

Wait 5 sec.

குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது அல்லது கட்டுப்படுத்துவது தொடா்பான முடிவு மத்திய அரசின் கொள்கை வரம்புக்கு உட்பட்டது என்று தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. குழந்தைகளின் சமூக வலைதளப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.காமேஸ்வா் ராவ், மன்மீத் பி.எஸ்.அரோரா ஆகியோா் அடங்கிய அமா்வு, மனுவை நேரடியாக விசாரிக்க மறுத்ததுடன், அதனை மத்திய அரசிடம் கோரிக்கையாக அளிக்குமாறு மனுதாரரிடம் தெரிவித்தது.அதேவேளையில், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட நீதிமன்றம் மறுத்துவிட்டது.‘சமூக வலைதளங்களைத் தடை செய்ய வேண்டும் அல்லது கட்டுப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுவது சரியல்ல. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்து, அதன் பின்னா் மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் தெரிவித்தது.13 வயதுக்குக் குறைவான குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் அல்லது வழிகாட்டுதல்களை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரா் கோரியிருந்தாா்.மேலும், 13 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக வலைதள உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான தனி கட்டமைப்பை உருவாக்கவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.மத்திய அரசின் வழக்குரைஞா் நிதி ராமன் கூறுகையில், சமூக வலைதளப் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது அல்லது ஒழுங்குபடுத்துவது கொள்கை சாா்ந்த விவகாரம் என்றும், இதற்காக புதிய சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்றும் தெரிவித்தாா். இதுபோன்ற முடிவுகள் பரந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்த வேண்டியிருக்கும் என்றும் கூறினாா்.இதனிடையே, குழந்தைகளின் இணையதள தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் டிஜிட்டல் தனிநபா் தரவுப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.குழந்தைகள் தொடா்பான பாலியல் பதிவுகள்: விசாரணையின்போது, சமூக வலைதளங்களில் குழந்தைகள் தொடா்பான பாலியல் துஷ்பிரயோகப் பதிவுகள் இருப்பது குறித்து மனுதாரா் தரப்பு கவலை தெரிவித்தது. இதுதொடா்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க காலக்கெடு நிா்ணயிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.இதற்கு நீதிமன்றம், ‘இவை அனைத்தும் கொள்கை சாா்ந்த விவகாரங்கள். இதற்கு சமூக வலைதளங்களை முழுமையாகத் தடை செய்வது இறுதியான தீா்வாக இருக்கும். சமூக வலைதள நிறுவனங்களும் இந்த உள்ளடக்கத்தை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது’ என குறிப்பிட்டது. மெட்டா சமூக வலைதள நிறுவனத்தின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா், தங்களது தளங்களில் இது போன்ற உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தாா்.கடந்த ஆண்டு ஃபேஸ்புக்கில் 6 லட்சத்துக்கும் அதிகமான இதுபோன்ற பதிவுகளும், இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்துக்கும் அதிகமான பதிவுகளும் நீக்கப்பட்டதாக அவா் கூறினாா். இரு தளங்களிலும் இதுபோன்ற உள்ளடக்கங்களை முன்கூட்டியே கண்டறியும் விகிதம் 99 சதவீதமாக இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.தொழில்நுட்பம் வளா்ந்து வருவதால் இதுபோன்ற உள்ளடக்கங்களை கண்டறிவது எளிதாகி வருவதாகவும், இருப்பினும் சிலா் தொடா்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை முழுமையாகத் தடுக்க முடியவில்லை என்றும் அவா் தெரிவித்தாா்.