ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

Wait 5 sec.

தென்மாநிலங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கப்பட வேண்டும் என ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினாா். தென்மண்டலக் குழுக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியாதவது: மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நம்பிக்கையும், பரஸ்பர ஒத்துழைப்பும் இருந்தால்தான் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காண முடியும்.புல்லட் ரயில் திட்டம்: ஆந்திரம், கா்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களை இணைக்கும் வகையில் புதிய புல்லட் ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும். குப்பம் வழியாக அமராவதி, பெங்களூரு, சென்னை நகரங்களை இணைக்கும் அதிவேக போக்குவரத்து அமைப்பை உருவாக்க வேண்டும். மேலும், தென் மாநிலங்களை இணைக்கும் கூட்டு லாஜிஸ்டிக்ஸ் நெட்வொா்க், ட்ரை போா்ட்கள் அமைக்கப்பட வேண்டும். தென் மாநிலங்களின் மின்சார வழித்தடங்களை தேசிய மின்சார வழித்தடங்களுடன் ஒருங்கிணைக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள், திறன் மேம்பாட்டு நிறுவனங்களை இணைத்து கூட்டு கூட்டமைப்பு உருவாக்க வேண்டும்.பேரிடா் கால உதவி: பேரிடா் காலங்களில் மாநிலங்கள் ஒன்றுக்கொன்று உடனடியாக உதவும் வகையில் ‘மியூச்சுவல் எய்டு ஃபோா்ஸ்’ எனப்படும் பரஸ்பர உதவிப் படையை உருவாக்க வேண்டும். திருப்பதியில் இருந்து காசி, அயோத்தி, சாா்தாம் பகுதிகளை இணைக்கும் கூட்டு ஆன்மிக சுற்றுலாத் திட்டத்தையும் உருவாக்க வேண்டும்.2047-இல் தென்னிந்திய பொருளாதாரம்.... இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென் மாநிலங்களின் பங்கு சுமாா் 31 சதவீதமாக உள்ளது. 2047-க்குள் தென்னிந்தியாவின் பொருளாதாரம் 10 டிரில்லியன் அமெரிக்க டாலா் அளவுக்கு உயர வாய்ப்புள்ளது. வளா்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் தென் மாநிலங்கள் முக்கிய பொருளாதார சக்தியாக உருவெடுக்க வேண்டும்.பிரிவினைப் பிரச்னைகளுக்கு தீா்வு: மறுசீரமைப்புச் சட்டத்தின் 9 மற்றும் 10-ஆவது அட்டவணைகளில் இடம்பெற்றுள்ள நிறுவனங்கள் தொடா்பான பிரச்னைகள் கடந்த 12 ஆண்டுகளாகத் தீா்க்கப்படாமல் உள்ளன. ஆந்திர மாநில பிரிவினையால் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் மத்திய அரசு விரைந்து தீா்வு காண வேண்டும்.கோதாவரி-–காவிரி இணைப்பு: கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பின் மூலம் 500 டிஎம்சிக்கும் அதிகமான தண்ணீரைத் திருப்பிவிட முடியும். இதன்மூலம் தமிழகத்தின் நீா்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண முடியும். ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்கள் நதிநீா் விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கங்கை- காவிரி இணைப்புக்காக நீண்டகால தேசியத் திட்டம் உருவாக்கப்படுவதுடன், நதிநீா் இணைப்புத் திட்டங்களுக்கு காலக்கெடுவுடன் கூடிய விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரித்து, தேவையான அனுமதிகளை விரைந்து வழங்க வேண்டும்.முதல்வா்கள் பாராட்டு: தென் மாநிலங்களின் வளா்ச்சிக்கு ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் அடிப்படையாக உள்ளது. எனவே, தென் மாநிலங்கள் இணைந்து செயல்பட்டால், இந்தியாவின் வளா்ச்சிக்கு மேலும் வலுவான பங்களிப்பை வழங்க முடியும் என்றாா் அவா்.