நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால், மற்றதுதாரித்திருத்தல் தகுதி; மற்று-ஓரும்புகழ்மையாக் கொள்ளாது, பொங்குநீர் ஞாலம்சமழ்மையாக் கொண்டு விடும்..(பாடல் 72 அதிகாரம்: பொறை உடைமை) நேர்மையான பண்பு அற்றவர்களாகிய கீழோர்கள், பண்பற்ற இழிந்த சொற்களைத் தம்மைக் குறித்துச் சொல்லிய காலத்திலும், அதனைப் பாராட்டாது பொறுத்திருப்பதே அறிவுடையோரின் தகுதியுடைமையாகும். அதற்கு மாறுபட்டதாகிய பொறுமையின்மையை, மிக்க நீர்ப்பெருக்கையுடைய கடலாற் சூழப்பட்ட பூமியிலுள்ள உயர்ந்தவர்கள், புகழுக்குக் காரணமாகக் கொள்ளாது, பழித்தற்குக் காரணமாகவே எண்ணித் தம்மிடத்தினின்றும் நீக்கிவிடுவார்கள்.