நான் ஊழல் செய்யவில்லை: தற்கொலை கடிதத்தில் முன்னாள் பேரவைத் தலைவர் உருக்கம்!

Wait 5 sec.

மேற்கு வங்கத்தில் முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர் ஆஷிஷ் பானர்ஜி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது.மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் சட்டப்பேரவைத் துணைத் தலைவருமான ஆஷிஷ் பானர்ஜி, 2001 முதல் ராம்பூர்ஹட் தொகுதி எம்.எல்.ஏ. ஆக இருந்து வருகிறார். மாநில பள்ளிக் கல்வி மற்றும் விவசாயத் துறை அமைச்சராகவும் இவர் பதவி வகித்துள்ளார்.2026 பேரவைத் தேர்தலில் அதே ராம்பூர்ஹட் தொகுதியில் போட்டியிட்ட இவர் பாஜகவின் துருவா சாஹாவிடம் 24,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதனால், இவர் அரசியலில் பெரிதாக ஈடுபடாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், ராம்பூர்ஹட்டில் உள்ள தனது இல்லத்துக்கு அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் ஆஷிஷ் பானர்ஜி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் இன்று காலை மீட்கப்பட்டது. அவரது உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.இதனைத் தொடர்ந்து, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அறையில் வங்க மொழியில் தற்கொலை கடிதம் ஒன்றை அவர் எழுதி வைத்திருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.அவரது தற்கொலை கடிதத்தில், ”நான் மாணவனாக இருந்தபோதிருந்தே அரசியலில் ஈடுபட்டிருந்தேன். ஆனால், எனது பொது வாழ்வில் ஒருபோதும் நான் ஊழலில் ஈடுபட்டதில்லை. நான் பர்தமான் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தேன். அப்போதும் நான் ஊழலில் ஈடுபட்டதில்லை.எங்களுடைய அரசியல் சித்தாந்தங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால், யாருக்கும் எதிராக இருந்ததில்லை. எனது கட்சியின் தவறுகளுக்கு எதிராக என்னால் ஒருபோதும் எதிர்ப்புத் தெரிவிக்க முடிந்ததில்லை. நான் செய்த வேலைகளுக்காக ஒரு ரூபாய் கூட லஞ்சமாகப் பெற்றதில்லை.தாராபீத் ராம்பூர்ஹாட் மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த பொதுக் கூட்டங்களைத் தவிர, எனக்கு அங்கு வேறு எந்தப் பொறுப்புகளும் இருந்ததில்லை. நான் ஒப்பந்தங்களுக்கான குழுவில் இருந்ததில்லை. காசோலைகளை வழங்கும் அதிகாரமும் எனக்கு இல்லை. கட்டடத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, தடையில்லாச் சான்றிதழ்கள் வழங்குவது போன்ற விஷயங்களிலும் நான் ஈடுபட்டதில்லை.இதுபற்றி யாரும் என்னிடம் விவாதித்ததுமில்லை. என் மீது அவதூறு பரப்ப குற்றச்சாட்டுகள் வைப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.அரசியலில் இணைவது இன்று ஒரு பெரும் தவறு என நான் நினைக்கிறேன். எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அரசியலில் சேர வேண்டாம் என்பதே எனது அறிவுரை. உங்கள் சொந்த வேலைகளை மட்டும் நீங்கள் செய்யுங்கள்” என்று எழுதியுள்ளார்.தன்னை அவதூறு செய்தவர்கள் எவரின் பெயரையும் கடிதத்தில் அவர் குறிப்பிடவில்லை. மேலும் , "நான் என் வாழ்நாள் முழுவதும் கற்பித்திருக்கிறேன். நான் ஒருநாளும் வகுப்புகளைத் தவறவிட்டதில்லை. சிறப்பு வகுப்புகளையும் நடத்தியுள்ளேன். நான் பல மாணவர்களுக்கு எந்தக் கட்டணமும் வாங்காமல் கற்பித்துள்ளேன். அவர்களிடமிருந்து எனக்கு அதிகளவு அன்பு கிடைத்துள்ளது" என்றும் குறிப்பிட்டிருந்தார்.மேற்கு வங்கத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள பாஜக அரசு திரிணமூல் காங்கிரஸின் முன்னாள் எம்எல்ஏ-க்கள், தலைவர்களுக்கு எதிராக ஊழல் தொடர்பான விசாரணைகள் மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதில், ஆஷிஷ் பானர்ஜி மீதும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. [தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].A suicide note left by former West Bengal Deputy Speaker Ashish Banerjee has been found following his suicide.திரிணமூல் காங். அலுவலகத்தில் முன்னாள் பேரவைத் தலைவர் தூக்கிட்டுத் தற்கொலை