தமிழ்நாட்டில் ஆளும் தவெக அரசு கொண்டு வரவிருக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளியில், தங்க நகைக்கடை ஒன்று, ஒரு பைசாவுக்கு டெண்டர் கோரியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் அறிவிக்கப்பட்ட தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு, பராமரிப்புப் பொருள்களுடன் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவிருக்கிறது. தமிழர்களின் பாரம்பரியமான தாய்மாமன் சீர் மரபை போற்றும் வகையில் இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இந்த திட்டத்தின் கீழ், தங்க மோதிரங்கள் வாங்க தமிழக அரசு சார்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இந்த டெண்டரில் பங்கேற்ற நகைக் கடைகள் கோரியிருந்த விலை நிர்ணய விவரங்கள் என்று ஒரு பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் மிகக் குறைந்த விலையைக் கோரியவராக அறியப்படும் நகைக்கடை, தங்க மோதிரம் செய்வதற்குத் தேவையான தங்கத்தின் விலையைத் தவிர்த்து, செய்கூலி, சேதாரம், போக்குவரத்து, பேக்கிங் என அனைத்துக்குமான செலவுகளுக்கும் ஒரு மோதிரத்துக்கு ஒரு பைசா கொடுத்தால் போதும் என குறிப்பிட்டிருக்கிறதாம். மற்ற நகைக் கடைகள் இதற்கு ரூ.400 முதல் ஆயிரம் ரூபாய் வரை கோரியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த தகவலின் அடிப்படையில், மிகக் குறைந்த டெண்டர் கோரி, ஒரு பைசா நகைக் கடை, குறைந்த ஏலதாரர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளதாம். அரசு மருத்துவமனைகளில் பெண்கள் மகப்பேறு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே ஒப்பந்தப்புள்ளி நடைமுறையை அரசு இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால், ஒரு பைசா நிர்ணயித்திருக்கும் நகைக் கடைக்குத்தான் இந்த ரூ.755 கோடி மதிப்பிலான டெண்டர் ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. Gold Ring Scheme! Did a jewelry store call for a tender at 1 paisa?