மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூபாய் 60 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் சார் பதிவாளர் அனந்தராமன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் தாசில்தார், வி.ஏ.ஓ., நிலத்தை பெற்றவர்கள், சார் பதிவாளர் என அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர்கோவில் சேவைக்காக வழங்கப்பட்ட சுமார் ரூ.60 கோடி மதிப்பிலான கோயில் அறக்கட்டளை நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்து, போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து ஆக்கிரமித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் 1.7 முதல் 2 ஏக்கர் வரையிலான நிலம் தொடர்பாக இந்த முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. 1930-ஆம் ஆண்டு கோயில் சேவைக்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட இந்த சொத்தை விற்பனை செய்யவோ, அடமானம் வைக்கவோ முடியாத நிலையில், வருவாய் ஆவணங்களில் கோயிலின் உரிமை மாற்றப்பட்டு, தனிநபர்கள் பெயரில் பட்டா பெறப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.19 பேர் மீது வழக்குப்பதிவுஇதுதொடர்பாக மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை அளித்த புகாரின் பேரில், மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் அரசு அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், சார் பதிவாளர்கள் மற்றும் நிலத்துடன் தொடர்புடைய தனிநபர்கள் என மொத்தம் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இந்தப் பட்டியலில் முன்னாள் தாசில்தார் அன்பழகன், முன்னாள் வி.ஏ.ஓ. அரசன், முறப்பநாடு முன்னாள் சார் பதிவாளர் அனந்தராமன், பிரகாஷ், பிரசாந்த், சந்தனகருப்பன் உள்ளிட்ட அதிகாரிகளும், ராஜ்குமார், இளையராஜா, அனீஷ் உள்ளிட்ட தனிநபர்களும் இடம்பெற்றுள்ளனர்.முதல் கட்டமாக ராஜ்குமார், இளையராஜா கைதுவிசாரணையின் தொடக்க கட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இந்த முறைகேட்டில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படும் உசிலம்பட்டியைச் சேர்ந்த இளையராஜாவும் கைது செய்யப்பட்டார்.முன்னாள் தாசில்தார் அன்பழகன் கைதுஅப்போது மதுரை வடக்கு வட்டாட்சியராக பணியாற்றிய அன்பழகன் கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், துணை ஆட்சியர் அந்தஸ்திலும் பணியாற்றி வந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.விசாரணையில், கோயிலின் உரிமையை வருவாய் ஆவணங்களில் இருந்து நீக்கி, ராமாயி ஆயியார் உள்ளிட்டோருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டதில் அன்பழகனுக்கு தொடர்பு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.அன்பழகன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த துணை ஆட்சியர் அந்தஸ்தைக் கருத்தில் கொண்டு, வருவாய் நிர்வாக ஆணையர் முருகானந்தம் அவரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.நான்காவது நபராக காளிக்குமார் கைதுஅதன்பின்னர், திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியைச் சேர்ந்த காளிக்குமார் கைது செய்யப்பட்டார். கோயில் நிலம் தொடர்பான முறைகேடான அடமானப் பத்திரப் பதிவில் அவர் தொடர்புடையதாக போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். இதன் மூலம் அப்போது வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.முன்னாள் வி.ஏ.ஓ. அரசன் கைதுதொடர்ந்து, கோயில் நிலத்தின் வருவாய் ஆவணங்கள் மற்றும் பட்டா மாற்ற நடவடிக்கைகளில் தொடர்புடைய முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) அரசன் கைது செய்யப்பட்டார்.அரசன் கைது செய்யப்பட்டபோது, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. தற்போது முன்னாள் சார் பதிவாளர் அனந்தராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு சார் பதிவாளர் அலுவலகத்தின் முன்னாள் சார் பதிவாளர் அனந்தராமன் தற்போது மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.2021-ஆம் ஆண்டு முறப்பநாடு சார் பதிவாளர் அலுவலகத்தில் கோயில் நிலம் தொடர்பான ஆவணம் பதிவு செய்யப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்பு வெளியான செய்திகள் தெரிவித்திருந்தன.அனந்தராமன் கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம், மீனாட்சி அம்மன் கோயில் ரூ.60 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 6 ஆக உயர்ந்துள்ளது.விசாரணை தொடர்ந்து தீவிரம்இந்த வழக்கில் அரசு வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர், சார் பதிவாளர்கள் மற்றும் தனிநபர்கள் என பல்வேறு தரப்பினர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.மேலும், நிலத்தின் பட்டா மாற்றம், போலி ஆவணங்கள் தயாரிப்பு, பத்திரப்பதிவு மற்றும் அடுத்தடுத்த பரிவர்த்தனைகளில் தொடர்புடையவர்களின் பங்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 19 பேரில் மேலும் யார் யார் கைது செய்யப்படுவார்கள் என்பது விசாரணையின் அடுத்த கட்டத்தில் தெரியவரும்.