புதுச்சேரியில் உர விற்பனைக்கு கடுமையானக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிமாநில (தமிழக) விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்துறை எச்சரித்துள்ளது.இது குறித்து வேளாண் இயக்குநரும், புதுச்சேரி யூனியன் பிரதேச உரக் கட்டுப்பாட்டு அதிகாரியுமான சீ. ஜெயசங்கா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்புமத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், ரசாயனங்கள் மற்றும் உர அமைச்சகங்கள் அறிவுறுத்தல்களை அமல்படுத்தும் வகையில், 1985 ஆம் ஆண்டின் உரக் கட்டுப்பாடு ஆணையின் விதிகளின் படி, புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள உர விற்பனை உரிமம் பெற்ற அனைத்து சில்லறை மற்றும் மொத்த உர விற்பனையகங்களும் கண்காணிக்கப்படுகின்றன.எந்த உரங்களையும் புதுச்சேரி பகுதியினைச் சாா்ந்த விவசாயிகள் தவிர, அண்டை மாநிலமான தமிழகத்தின் விவசாயிகளுக்கு எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக் கூடாது. அதுபோன்று விற்பனை செய்தால் மாநிலம் விட்டு மாநிலம் விற்பனை செய்ததாகக் கருதப்பட்டு, மத்திய அரசின் 1955 ஆம் ஆண்டின் அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.கடவுச்சொல் அவசியம்:புதுச்சேரி பகுதியைச் சாா்ந்த விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யும் முன், அவா்களின் மொத்த நிலப்பரப்பு மற்றும் அந்தப் பருவத்தில் சாகுபடி செய்யும் பரப்பளவினை அறிந்து அதற்கேற்ப உரங்களை விற்பனை செய்ய வேண்டும். சாகுபடி செய்யும் நிலப்பரப்பினை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணையதளம் மூலம் அறிந்திட அனைத்து மொத்தம் மற்றும் சில்லறை உர விற்பனையாளா்களுக்குத் தனித்தனியாக உபயோக அடையாளம் மற்றும் கடவுச்சொல் கொடுக்கப்பட்டுள்ளது.உரங்களை விற்பனை செய்யும் போது கண்டிப்பாக ரசீது தரும் விற்பனை முனைய கருவியை உபயோகப்படுத்தல் வேண்டும். இக் கருவி இயங்கவில்லையென்றால் உடனடியாக வேளாண் இயக்குநரகத்தின் உர உரிமங்கள் மற்றும் கண்காணிப்பு பிரிவின் வேளாண் அதிகாரியை அணுகி சரி செய்து கொள்ள வேண்டும். எந்த ஒரு விற்பனைக்கும் கண்டிப்பாக விற்பனை ரசீது வழங்கப்பட வேண்டும். விற்பனை ரசீதில் உள்ள விவரங்கள், விற்பனை முனைய கருவியில் உள்ள தகவல்களுக்கு மாறாக இருக்க கூடாது.தவறினால் 1985 ஆம் ஆண்டின் உரக் கட்டுப்பாடு ஆணையில் கண்டுள்ள விதிகளின் படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். உரத் தயாரிப்பாளா்களும் விற்பனை முகவா்களை அவ்வப்போது கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.