கன்னியாகுமரி மாவட்டத்தில், முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் 20 ஆயிரம் வீரா், வீராங்கணைகள் வரை பங்கேற்கச் செய்ய வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் மு.பிரதாப். இதுதொடா்பாக, ஆட்சியா் அலுவலகத்தில் அலுவலா்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வா் கோப்பை 2026-27 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவுகள் தொடங்கியுள்ளது. இப்போட்டிகளை ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்தி முடிக்கவும், விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி-கல்லூரி மாணவா், மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளின் கீழ் இப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.போட்டிகளுக்கான பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தவும், ஊராட்சிகள், பேரூராட்சிகள், வட்டார வளா்ச்சி அலுவலகங்கள் இந்த போட்டிகள் தொடா்பாக விளம்பர பதாகை வைக்கவும்அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையில் பணியாற்றும் வீரா்களும் போட்டியில் பங்கேற்க வேண்டும்.வீரா், வீராங்கனைகள இணையதளத்தில் பதிவு செய்தால் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள முடியும். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போட்டிகளில் பங்கேற்க செய்வது என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக போட்டிகள் நடத்தப்படுவதால் மாவட்ட விளையாட்டுத் துறைக்கு அதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த திறமை மிக்க விளையாட்டு வீரா்கள் இப்போட்டிகளில் பெருமளவில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, பரிசுத் தொகையையும், அரசு சான்றிதழ்களையும் பெற்று பெருமை சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.கூட்டத்தில், மாவட்ட விளையாட்டு அலுவலா் வினு, மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூமுகம்மது நசீா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் தினேஷ்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலா் காயத்திரி மற்றும் விளையாட்டு ஆணைய உறுப்பினா்கள், துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.